ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ரூ.1¾ கோடியை சுருட்டிய கணக்கர்

முதுகுளத்தூர் கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் முனியசாமி, ராமநாதபுரத்தில் பணியாற்றிய போது அங்கும் ரூ.1¾ கோடி வரை கையாடல் செய்த அதிர்ச்சி தகவல் தணிக்கையின் போது வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்தில் ரூ.1¾ கோடியை சுருட்டிய கணக்கர்
Published on

முதுகுளத்தூர் கருவூலத்தில் ரூ.29 லட்சம் கையாடல் செய்த கணக்கர் முனியசாமி, ராமநாதபுரத்தில் பணியாற்றிய போது அங்கும் ரூ.1 கோடி வரை கையாடல் செய்த அதிர்ச்சி தகவல் தணிக்கையின் போது வெளியாகி உள்ளது.

தணிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தவர், முனியசாமி. இவரது சொந்த ஊர் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் ஆகும்.

இவர், கடந்த மாதம் ஓய்வூதிய கணக்கில் இருந்த ரூ.29 லட்சத்தை கருவூலக ரகசிய குறியீடை பயன்படுத்தி தனது பெயரிலும், தனது நண்பர் பெயரிலும் மாற்றி கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கருவூலத்தில் நடைபெற்ற தணிக்கையின் போது மேற்கண்ட ரூ.29 லட்சம் கையாடல் குறித்து தெரியவந்ததை தொடர்ந்து, சார்நிலை கருவூல உதவி அதிகாரி செய்யது சிராஜூதீன் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட கணக்கர் முனியசாமி மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் கணக்கர் முனியசாமி, ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் முதுகுளத்தூர் கருவூலத்தில் கையாடல் செய்த பணத்தினை அவர் திருப்பி செலுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

4 அதிகாரிகள் ஆய்வு

ஏற்கனவே முனியசாமி, ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட கருவூலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி முதல் கடந்த நவம்பர் 1-ந் தேதி வரை பணியாற்றி உள்ளார். அதன்பின்னர்தான் முதுகுளத்தூருக்கு பணியிட மாறுதலாகி சென்றுள்ளார்.

அவர் ராமநாதபுரம் மாவட்ட கருவூலத்திலும் கையாடல் செய்திருக்கலாம் என்று கருதி மதுரை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 4 அதிகாரிகள் குழுவினர் கடந்த 10 நாட்களாக துருவி துருவி விசாரணை செய்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

ரூ.1 கோடி கையாடல்

இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. அதாவது, கணக்கர் முனியசாமி, முதுகுளத்தூர் பாணியிலேயே ராமநாதபுரம் கருவூலத்தில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 74 ஆயிரத்து 719-ஐ கையாடல் செய்துள்ளதாக ஆவணங்களின் அடிப்படையில் கண்டுபிடித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த பணத்தினை அவரது வங்கி கணக்கிலும், அவரின் நெருங்கிய நண்பர்களின் வங்கி கணக்கிலும் வரவு வைத்து கையாடல் செய்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.

போலீசில் புகார்

எனவே கணக்கர் முனியசாமி மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் மாவட்ட கருவூல அதிகாரி சேஷன் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்போது முனியசாமி பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com