சுற்றுலா தலமாக மாறிய ரெயில் நிலையம்

ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக்கிடந்த ரெயில் நிலையத்தை சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறார்கள் இருவர்.
சுற்றுலா தலமாக மாறிய ரெயில் நிலையம்
Published on

மக்கள் கூட்டம் அலைமோதும் ரெயில் நிலையங்களும் உள்ளன. ரெயில் வந்து நின்றால் கூட ஒருசிலரே ஏறி, இறங்கும் ரெயில் நிலையங்களும் இருக்கின்றன. எப்போதாவது ரெயில் வரும் நிலையங்களும் உள்ளன.

அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது, நல்பரி ரெயில் நிலையம். இதுதான் அந்த மாநிலத்தின் கடைசி ரெயில் நிலையம். அடுத்த ரெயில் நிலையம் மேகாலயா மாநிலத்திற்குரியது.

மலைமுகடுகள், பச்சை பசேல் சூழ்ந்த வசீகர நிலப்பரப்புகள், அமைதியான சூழல் என இயற்கையை மனதார ரசிக்கும் அத்தனை அம்சங்களையும் இந்த ரெயில் நிலையம் ஒருங்கே பெற்றிருக்கிறது. ஆனால் கடைசி ரெயில் நிலையம் என்பதாலும், தினமும் ஒரே ஒரு ரெயில்தான் இயக்கப்படும் என்பதாலும் அந்த ரெயில் நிலையத்தின் பின்னணி அழகு பலரின் பார்வையில் படாமலேயே இருந்துவிட்டது. அந்த பகுதியை சேர்ந்த பில்லோ ரபா - பியூசி ரபா என்ற சகோதரன், சகோதரி இருவரும் ரெயில் நிலையத்திற்கு தற்செயலாக சென்றிருக்கிறார்கள்.

மாலை நேரத்தில் இயற்கையின் அழகில் மிளிர்ந்த ரெயில் நிலையத்தின் பின்னணியை பார்த்ததும் மனம் நெகிழ்ந்து போனார்கள். இந்த ரெயில் நிலையம் ஒரே ஒரு நடைமேடையை கொண்டது. காலையில் இந்த ரெயில் நிலையத்தை கடந்து செல்லும் ரெயில், பின்பு இரவில்தான் திரும்பி வரும். உயரமான மலை முகடுகளுக்கு இடையே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்குள் ரெயில் ஊர்ந்து செல்லும் அழகும், அதில் இருந்தபடி மலை முகட்டை ரசிக்கும் காட்சியும், தண்டவாள பகுதியில் நின்று மலை முகட்டின் பிரமாண்டத்தை பார்க்கும் விதமும் கண்களுக்கும், மனதுக்கும் விருந்து படைக்கும். அதனை நேரடியாக உணர்ந்த இருவரும் மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

ரெயில் நிலையத்தின் பின்னணி அழகை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட இப்போது அந்த இடமே சுற்றுலா தலமாக மாறிவிட்டது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ரெயில் நிலையத்திற்கு வந்து இயற்கையின் அழகை ரசித்து செல்கிறார்கள்.

''இந்த இடத்தைப் பார்த்த உடனேயே நான் அதன் மீது காதல் கொண்டேன். இதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று கனவு கண்டேன். ரக்ஷா பந்தன் சமயத்தில் அது சாத்தியமாகி இருக்கிறது'' என்று மனம் பூரிக்கிறார், பில்லோ ரபா.

தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வதால் உள்ளூர்வாசிகள் அங்கு கடைகள் அமைத்து தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி தேடி இருக்கிறார்கள். ரெயில் பாதையை ஒட்டியுள்ள மலையை சுத்தம் செய்தல், மரங்கள் நடுதல் மற்றும் ரெயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சுத்தமாக வைத்திருத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்கிறார்கள்.

''நாங்கள் நல்பரி நிலையம் மற்றும் அதனை சூழ்ந்திருக்கும் அழகிய இடத்தை சமூக ஊடகத்தில் அறிந்து கொண்டோம். இளம் சகோதர-சகோதரி இருவர் உள்ளூர் மக்களுடன் இணைந்து ஒரு ரெயில் நிலையத்தை சுற்றுலா தலமாக மாற்றியிருப்பது பாராட்டுக்குரியது. அடிக்கடி இங்கு வந்து சென்று இந்த இயற்கையின் அழகை அனுபவிக்க விரும்புகிறேன்'' என்கிறார், ஒரு சுற்றுலா பயணி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com