அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் சூழ்ச்சி

அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் சூழ்ச்சி செய்வதாக பள்ளிபாளையத்தில் சசிகலா பேசினார்.
அ.தி.மு.க.வை அழிக்க தி.மு.க.வினர் சூழ்ச்சி
Published on

பள்ளிபாளையம்

சசிகலா

சேலத்தில் இருந்து நேற்று மாலை ஈரோடு வந்த சசிகலாவிற்கு, சசிகலா பேரவையின் மாநில செயலாளர் ஆறுமுகம் தலைமையில் பள்ளிபாளையத்தில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சசிகலா வேனில் இருந்தபடியே பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்து எந்த நல்ல திட்டங்களையும் மக்களுக்கு செய்யவில்லை. இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று மேடைக்கு மேடை பேசியும் மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று அடையவில்லை.

அவர்கள் ஆட்சியில் ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு போன்றவற்றை தான் தர முடிந்தது. மேலும் தினசரி தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் போதைப்பொருள் விற்பனை, திருட்டு போன்றவை நடப்பதாக செய்திகள் வந்தபடி உள்ளன. தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற செய்திகள் தான் வருகிறது.

நான் ஓயமாட்டேன்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளனர். அதை மக்கள் மறக்க மாட்டார்கள். தி.மு.க.வினர், அ.தி.மு.க.வை அழிக்க சூழ்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் அது ஒருபோதும் நடக்காது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தி.மு.க.வை விரட்டுவோம். அ.தி.மு.க.வை பலமான கட்சியாக ஆட்சியில் அமர வைக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

எத்தனை சூழ்ச்சிகள் ஏற்பட்டாலும் அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன். மக்கள் விரோத தி.மு.க.வை எதிர்ப்பது தான் நமது ஒரே நோக்கமாக இருக்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமைக்கும்வரை நான் ஓயமாட்டேன் என்று கூறுகிறேன். எம்.ஜி.ஆர்.யும், ஜெயலலிதாவையும் மனிதஇனம் உள்ளவரை எவரும் மறக்க மாட்டார்கள். பிரிந்தவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் கோபால் மற்றும் சசிகலா பேரவை மற்றும் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com