குற்றாலத்தில் அலைமோதும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம்: அருவிகளில் உற்சாக குளியல்

மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.;

Update:2025-12-13 12:04 IST

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்துக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது மழைப்பொழிவு குறைந்துவிட்டதால் குற்றால அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.

சபரிமலை சீசன் என்பதால் அங்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் சுற்றுலா மட்டுமல்லாது ஆன்மீக தலமாகவும் உள்ள குற்றால அருவிகளில் புனித நீராடி விட்டு சபரிமலை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.இதனால் குற்றாலத்துக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலையிலும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். அதில் அய்யப்ப பக்தர்கள் புனித நீராடிவிட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்களின் கூட்டத்தால் குற்றாலம் பகுதியில் உள்ள கடைகளில் டீ, காபி, தின்பண்டங்கள் விற்பனை களைகட்டியது. இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.காலையில் குற்றாலத்தில் புனித நீராடிவிட்டு மாலை நேரங்களில் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் செல்கின்றனர். இதனால் ரத வீதி மற்றும் பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்