காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: 31-ந்தேதிக்குள் அமல்படுத்தப்படும் - டாஸ்மாக் உத்தரவாதம்
வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.;
சென்னை,
வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து வரும் ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச், ஊட்டி, கொடைக்கானல், மேகமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டது.
இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் சார்பில் வக்கீல் கே.சதீஷ்குமார் ஆஜராகி, ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏற்கனவே 22 மாவட்டங்களில் அமல்படுத்தி விட்டோம். தற்போது, காஞ்சீபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தியுள்ளோம். மீதமுள்ள மாவட்டங்கள் என்று தமிழ்நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு விடும் என்று உறுதி அளிக்கிறோம் என்று கூறினார்.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மனுவில், ‘‘டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள். காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவது, அதற்கான பணத்தை திருப்பிக் கொடுப்பது போன்ற கூடுதல் வேலை செய்யவேண்டியதுள்ளது. எனவே, இந்த பணிக்காக கூடுதல் ஊழியர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் எங்களை ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்துக்காக கூடுதல் ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் நியமிக்கவேண்டும்'' என்று கூறினர். மேலும், வருகிற 31-ந்தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறிய உத்தரவாதத்தை பதிவுச்செய்துக் கொண்டு, விசாரணையை 2026-ம் ஆண்டு ஜனவரி 23-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.