மேட்ரிமோனியல் மோசடியில் புது ரகம்: பல கெட் அப்.. பல செட் அப்.. 20 பெண்களை மயக்கிய சென்னை டிரைவர்
ஆசிரியை உள்பட 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பல லட்சம் ரூபாய்களை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.;
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க பெண் திண்டிவனம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தன்னை ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த அருண் மொழி என்பவர் திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் இருசக்கர வாகனம், ஐபோன் மற்றும் ஜிபே மூலம் 12 லட்சம் பெற்றதாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி விட்டதாகவும் அவரது எண்ணில் தொடர்பு கொண்டால் தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதாக அதில் கூறியிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில் திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த செல்போன் என்னை ஆய்வு செய்தனர்.
இதனைதொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அருண்மொழியை சென்னையில் கைது செய்தனர். பின்னர் அவரை மயிலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சென்னையில் டிரைவராக வேலை செய்து வந்த அருண்மொழிக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளதும் அதில் முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் 2-வது மனைவிக்கு ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது.
அது மட்டுமல்லாமல் மேலும் பல பெண்களிடம் அவர் ஆன்லைன் திருமண தகவல் மையம் மூலமாக தான் திருமணம் ஆனதை மறைத்து என்ஜீனிரிங் படித்துவிட்டு சென்னையில் பிரபல ஐடி கம்பெனி நடத்தி வருவதாக கூறி சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி ஆசைவலையில் வீழ்த்தி உள்ளார். மேலும் அவரது கெட்டப்புக்கும் செட்டப்புக்கும் மயங்கி, இளம்பெண்கள் அவர் கூறியது உண்மைதான் என நம்பி அவரது ஆசை வலையில் வீழ்ந்துள்ளனர்.
இதனையடுத்து அவரது செல்போனில் வாட்ஸ் அப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பல பெண்களிடம் பல்வேறு விதமான பொய்களை அள்ளிவீசி உள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு விதமான பொய்களை சொல்ல அவர்களை நம்பவைத்து அவர்களிடம் இருந்து பணம், நகை என சுமார் 20 லட்சத்தை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.இதனைதொடர்ந்து அருண்மொழி வைத்திருந்த இருசக்கர வாகனம் ஐபோன் போன்றவைகளை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமாக திண்டிவனம் டிஎஸ்பி பிரகாஷ் கூறுகையில்,
அருண்மொழி பாதிக்கப்பட்ட திண்டிவனத்தை சேர்ந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தை புதியதாக வாங்கி அந்த பெண்ணை திண்டிவனம் முழுவதும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று தான் இந்த ஊரில் தான் வசிக்க உள்ளதாகவும் அதனால் இந்த ஊர் முழுவதும் தெரிந்து கொள்ளவே சுற்றுவதாகவும் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அந்த இரு சக்கர வாகனத்தை ஓ.எல்.எக்ஸ் மூலமாக தேடியபோது தொண்டி அருகே அதனை விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருமண இணையதளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் அதில் சந்தேகம் ஏற்பட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
தேவையில்லாத சமூகவலைதளங்களை பயன்படுத்துவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். அருண்மொழி மூலமாக ஏமாந்த பெண்கள் யாராவது இருந்தால் மயிலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றார்.