2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி..? பிரேமலதா விஜயகாந்த் பதில்
தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் தேமுதிக, பாமக யாருடன் கூட்டணி என்பதுதான் இன்னும் உறுதியாகாமல் இழுபறியாக இருக்கிறது.
விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார். கடந்த 2021-ல் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் 2026 தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. அதனால் கூட்டணி என கூற முடியாது. எங்கள் கூட்டணி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும்” என்று கூறினார்.
கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு, 234 தொகுதிகளுமே எங்கள் இலக்குதான் என்று பிரேமலதா பதில் அளித்தார்.