

பெங்களூரு:
பெங்களூரு வடக்கு தாலுகாவில் உதவி ஆணையாளராக பணியாற்றி வருபவர் ரங்கநாத் (வயது 50). இந்த நிலையில் கர்நாடக பொது நிலம் கழகத்தின் நிர்வாக மேலாளராக ரங்கநாத் பணியாற்றிய போது அரசுக்கு சொந்தமான 37 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ரங்கநாத் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டு இருந்தார். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரின்பேரில் ரங்கநாத் வீட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது ரங்கநாத் வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர்.
அந்த ஆவணங்கள் அடிப்படையில் ரங்கநாத் நில முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். அவரை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு பெங்களூரு 23-வது கூடுதல் சிட்டி சிவில் கோர்ட்டில் ரங்கநாத் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணையின் போது ரங்கநாத்திற்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் 20 நாட்களுக்குள் ஊழல் தடுப்பு படை போலீசார் முன்பு சரண் அடைய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து விடுவதாகவும் நீதிபதி கூறினார்.