ஏ.சி. இயங்கும்போது, சீலிங் பேன் இயக்கலாமா..? - இதை தெரிந்து கொள்ளுங்கள்

ஏ.சி. இயங்கும்போது, சீலிங் பேன் இயக்கலாமா? என்ற குழப்பம் நமக்குள் இருக்கும்.
ஏ.சி. இயங்கும்போது, சீலிங் பேன் இயக்கலாமா..? - இதை தெரிந்து கொள்ளுங்கள்
Published on

ஏ.சி. இயக்கும்போது, அதனுடன் சேர்த்து சீலிங் பேனை இயக்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அது சரியானதா..? தவறானதா..? என்ற குழப்பம் நமக்குள் இருக்கும். உண்மையில், ஏ.சி.யுடன், டேபிள் பேன், சீலிங் பேன் இயக்குவது தூசி தொந்தரவு உட்பட சில பிரச்சினைகளை உண்டாக்கினாலும், பல வழிகளில் நன்மையும் செய்கிறது. அதை தெரிந்து கொள்வோம்.

சுழற்சி

ஏ.சி. இயங்கும்போது சீலிங் பேனை பயன்படுத்துவதால் அறையில் காற்றின் சுழற்சி அதிகரிக்கிறது. இதனால் குளிர்ந்த காற்று அறை முழுவதும் வேகமாகப் பரப்பப்படுவதால், அறையின் வெப்பநிலை வேகமாகக் குறைந்து ஏ.சி. மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.

கூலிங்

சீலிங் பேன், டபிள் பேன் பயன்படுத்துவதன் மூலம் ஏ.சி. சிஸ்டத்தின் குளிரூட்டும் திறனை அதிகரிக்கலாம். பேன் ஓடும்போது ஏ.சி.யின் குளிர்ந்த காற்று பேனில் பட்டு நேரடியாக அறையில் இருப்பவர்கள் மீது படுகிறது. இதன் மூலமாக அதிக குளிர்ச்சியை நீங்கள் விரைவாக உணர முடியும். மேலும் ஏ.சி.யின் குளிர் உணர் சென்சார்கள் குறிப்பிட்ட வெப்பநிலையை விரைவில் இழப்பது தடுக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய ஏ.சி. யூனிட் குறைவாகவே வேலை செய்கிறது.

சேமிப்பு

ஏ.சி.யுடன் சேர்த்து சீலிங் பேன் பயன்படுத்தும் போது குறிப்பிடத்தக்க ஆற்றலை நீங்கள் சேமிக்கலாம். மேலே குறிப்பிட்டது போல ஏ.சி.யின் குளிர் உணர் சென்சார் குறிப்பிட்ட வெப்பத்தை இழக்காதபோது, குறைந்த ஆற்றலே பயன்படுத்தப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஏ.சி. அமைப்பின் சுமையை கணிசமாகக் குறைத்து, ஆற்றல் சேமிப்புக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக மின் கட்டணத்தின் அளவு குறைகிறது.

தரம்

ஏ.சி. இயங்கிக் கொண்டிருக்கும்போது மின்விசிறியை பயன்படுத்தினால், அது அறையில் எல்லா மூலைகளுக்கும் காற்றை நகர்த்துகிறது. இதனால் ஒரே இடத்தில் தேங்கி நிற்கும் காற்று சிதறுவதால், தூசி, நாற்றங்கள் போன்றவை விரைவில் நீங்குகிறது.

தேய்மானம்

ஏ.சி. ஓடும்போது சீலிங் பேன் பயன்படுத்தினால் ஏ.சி. யூனிட்டின் ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம். ஏ.சி.யின் பணிச்சுமையைக் குறைப்பதன் மூலம், கம்ப்ரஸர், பேன் மோட்டார் மற்றும் பிற பாகங்களின் தேய்மானம் குறைகிறது. இது பழுது மற்றும் பராமரிப்பு தேவைகளைக் குறைத்து, குளிரூட்டும் அமைப்பின் ஒட்டுமொத்த ஆயுளையும் நீட்டித்து, பணத்தை சேமிக்க உதவுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com