குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்

குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார்.
குழந்தைகளை கொண்டாடுவோம்..! இன்று தேசிய குழந்தைகள் தினம்
Published on

இன்று (நவம்பர் 14-ந் தேதி) முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள். இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து இந்தியாவின் சிற்பியாக அழைக்கப்பட்ட ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு செலுத்திய நேரு, குழந்தைகளின் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம் என தெரிவித்தார். குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செயல்படுத்தினார். குழந்தைகளுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பல்வேறு வழிகளில் சுட்டிக்காட்டினார்.

அவரை குழந்தைகள் 'நேரு மாமா' என்றே அழைக்கிறார்கள். அதனால் அவரது மறைவுக்குப் பின், அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகளை கொண்டாடுவதுடன், அவர்களின் நலன், கல்வி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளின் பிரியமான நேரு மாமாவுக்கு அரசியல் கடந்து பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்துகின்றனர். மேலும், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை, இலக்கிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு- சுவரூபராணி தம்பதியருக்கு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மூத்த மகனாகப் பிறந்தார், ஜவகர்லால் நேரு. செல்வ வளம் பொருந்திய வீட்டில் பிறந்த இவரது தந்தை வழக்கறிஞராக பணியாற்றினார். காஷ்மீர் கால்வாயைக் குறிக்கும் 'நெகர்' என்ற சொல்லே, மருவி ஜவகர்லால் நேரு பரம்பரையைக் குறிக்கும் 'நேரு' என்று மாறியது. 1916-ம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு, தனது தந்தையுடன் சென்ற நேரு, அங்கு காந்தியடிகளைச் சந்தித்தார். இருப்பினும் 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை சம்பவமே, நேருவை முழுமையாக காங்கிரசில் சேர்ந்து நாட்டிற்காக போராடத் தூண்டியது.

1920-ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, முதன் முறையாக சிறைக்குச் சென்றார், ஜவகர்லால் நேரு. விரைவிலேயே காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார். தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் 'உலக வரலாற்றின் காட்சிகள்', 'சுயசரிதை', 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' உள்ளிட்ட நூல்களை எழுதினார். இந்த நூல்கள் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்ததுடன், இந்திய காங்கிரசிலும் நேருவின் மதிப்பை உயர்த்தியது.

1929-ம் ஆண்டு லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் நிகழ்ச்சியை, நேரு தலைமையேற்று நடத்தினார். ஆங்கிலேயே அரசின் பிடியில் இருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் பிரகடனப்படுத்தினார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததும், டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறையில் வலிமையான திட்டங்களை உருவாக்க அவர் உறுதுணையாக இருந்தார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவரது அஸ்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய தேசம் முழுவதும் தூவப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com