100

ஒரு இளம் போலீஸ் அதிகாரியும், பெண் கடத்தல் கும்பலும். படம் "100" கதாநாயகன் அதர்வா, கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, டைரக்‌ஷன் சாம் ஆண்டன் படத்திற்கான சினிமா விமர்சனம்.
Published on

கதையின் கரு: அதர்வா, போலீஸ் வேலைக்கு தேர்வானவர். வேலைக்கான உத்தரவுக்காக காத்திருக்கிறார். அவருடைய உயிருக்குயிரான நண்பர், மகேஷ் ஏற்கனவே போலீஸ் வேலையில் இருந்து வருகிறார். அதர்வா ஒரு கையில் வேலைக்கான உத்தரவுடனும், இன்னொரு கையில் குற்றவாளியுடனும் வேலையில் சேருகிறார். தனக்கு குற்றவாளிகளை பிடிக்கும் கிரைம் பிரிவில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவர், அவசர போலீஸ் பிரிவான 100-ல் வேலைக்கு அமர்த்தப்படுவதால் ஏமாற்றம் அடைகிறார்.

இருப்பினும் அவர் உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல், பெண்களை கடத்தும் கும்பலுடன் மோதி, கடத்தப்பட்ட ஒரு பணக்கார குடும்பத்து சிறுவனை மீட்கிறார். கடத்தல் ஆசாமிகள் அடுத்ததாக 2 இளம் பெண்களை கடத்துகிறார்கள். அதில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியான மகேசின் தங்கை. அந்த இரண்டு பெண்களையும் அதர்வா எப்படி மீட்கிறார்? என்பது மீதி கதை.

அதர்வா, இளம் போலீஸ் அதிகாரி வேடத்தில், கச்சிதம். சண்டை காட்சிகளில் சாகசங்கள் செய்து, பார்வையாளர்களை நிமிர்ந்து உட்காரவைக்கிறார். காதல் காட்சிகளில் கவனத்தை திருப்பாமல், கதையுடன் நேர்மையாக பயணித்து இருக்கிறார்.

அவருடைய காதலியாக ஹன்சிகா மோத்வானி. படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் வந்து போகிறார். இடையில், அவரை தவிர்த்து இருப்பது ஏன்? என்று புரியவில்லை. பிஸ்டல் பெருமாள் கதாபாத்திரத்தில் ராதாரவி கலக்கியிருக்கிறார். அவர் பெயருடன் பிஸ்டல் இணைந்தது எப்படி? என்று விளக்கும்போது கிடைக்காத பாராட்டுகள், கடைசி காட்சியில் பிஸ்டலை அவர் பிடிக்கும்போது, (கைதட்டல்) கிடைக்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு, மைம்கோபி, ஆடுகளம் நரேன் தவிர மற்றவர்கள் அனைவரும் புதுமுகங்கள். யோகி பாபு வழக்கம் போல் வார்த்தை விளையாட்டில் சிரிக்கவைக்கிறார்.

கதையோட்டத்துக்கு வேகம் கூட்டுகிறது, சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை. பெரும்பகுதி காட்சிகள், இரவு நேர திகிலை நெஞ்சுக்குள் கடத்துகிறது. அதில், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்தின் பங்கு நிறைய. முதல் பாதியில், படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். இரண்டாம் பாதியை ஹாலிவுட் தரத்தில் தூக்கி நிறுத்தியிருக்கிறார், டைரக்டர் சாம் ஆண்டன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com