ஒரு கிராமத்து பேய் படம் - கொம்பு சினிமா விமர்சனம்

ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் 2 பெண்களும், அவர்களின் மூன்று நண்பர்களும் கிராமத்தில் உள்ள பேய் வீட்டுக்கு வருகிறார்கள். படம் "கொம்பு" படத்தின் விமர்சனம்.
ஒரு கிராமத்து பேய் படம் - கொம்பு சினிமா விமர்சனம்
Published on

வழக்கம் போல் ஒரு பேய் வீடு. அந்த வீட்டில் வசித்த 2 பெண்கள் தூக்கில் தொங்குகிறார்கள். அவர்களின் ஆவி, பேய் வீட்டில் சுற்றுவதாக பீதி பரவுகிறது. கிராமவாசிகள் அந்த வீட்டின் பக்கத்தில் போக பயப்படுகிறார்கள்.

இந்த நிலையில், ஆவிகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் 2 பெண்களும், அவர்களின் மூன்று நண்பர்களும் கிராமத்தில் உள்ள பேய் வீட்டுக்கு வருகிறார்கள். உள்ளே நுழைந்து ஆராய்ச்சி செய்யும் அவர்களை பேய்களின் நடமாட்டம் பயமுறுத்துவதாக உணர்கிறார்கள்.

நிஜமாகவே அந்த வீட்டில் பேய் இருக்கிறதா, இல்லையா? அங்கே 2 பெண்கள் தூக்கில் தொங்கியது ஏன், எப்படி, அதற்கு காரணம் யார்? என்ற மர்மமான கேள்விகளுக்கு விடைகள், படத்தின் இரண்டாம் பகுதியில் உள்ளன.

லொள்ளு சபா ஜீவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். ரஜினிகாந்தின் பழைய சாயல் உள்ள இவர் சில காட்சிகளில், சந்திரமுகியையும், மனோதத்துவ டாக்டர் சரவணனையும் நினைவூட்டுகிறார். படத்தின் முன் பகுதியில் இவருக்கு அதிக வேலை இல்லை. பின்பகுதியில் கதாநாயகனுக்கே உரிய கெத்து காட்டுகிறார். திஷா பாண்டே ஆடுகிறார், ஓடுகிறார், ஆவிக்கு பயப்படாமல் அழகு காட்டுகிறார். மும்பை வாசனையுடன் ஒரு நல்வரவு. பாண்டியராஜன், சுவாமிநாதன் இருவரும் தமாஷ்.

சுதீப் கேமரா, கிராமத்து திகிலை கூட்டுகிறது. தேவ் குருவின் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசையில் திறமை காட்டியிருக்கிறார். ஈ.இப்ராகிம் டைரக்ட் செய்திருக்கிறார். படத்தின் முதல் பாதி எந்த பயமுறுத்தல்களும் இல்லாமல் மெதுவாக கடந்து போகிறது. இரண்டாம் பாதியில் எதிர்பாராத திருப்பங்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com