சினிமா விமர்சனம் : நான் கடவுள் இல்லை

கொலை சம்பவங்களை செய்து ஜெயிலின் அடைக்கப்படும் குற்றவாளியை மீண்டும் பிடிக்க முயற்சிக்கும் போலீஸ் குறித்த கதை.
சினிமா விமர்சனம் : நான் கடவுள் இல்லை
Published on

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி. இவரது மனைவி இனியா. இவர்களுக்கு ஒரு மகள். கொலை, கொள்ளைகள் செய்யும் தாதா சரவணனை சமுத்திரக்கனி கைது செய்து ஜெயிலில் தள்ளுகிறார். அவர் தப்பி வந்து சமுத்திரக்கனி குடும்பத்தை அழிக்க துடிக்கிறார்.

தண்டனை வாங்கி கொடுத்த வக்கீல், நீதிபதி ஆகியோரை கொன்றுவிட்டு சமுத்திரக்கனியை கொல்ல நெருங்குகிறார். இன்னொரு புறம் தொழில் அதிபர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கடவுள் என்ற பெயரில் உதவி கேட்பவர்களுக்கு பணத்தை வாரி வழங்குகிறார்.

அவரிடம் சமுத்திரக்கனியின் மகளும் உதவி கேட்டு கடிதம் அனுப்புகிறார். சமுத்திரக்கனி குடும்பம் சரவணனின் கொலை வெறியில் இருந்து தப்பியதா? என்பது மீதி கதை.

போலீஸ் அதிகாரி வேடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரக்கனி. கடமை ஒரு பக்கம், பாசம் ஒரு பக்கம், குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய தவிப்பு ஒரு புறம் என்று பல வகையான நடிப்புகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி உள்ளார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் இனியா நிறைவான நடிப்பையும், மகளை காணாத பதற்றத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் அமைதியான நடிப்பாலும், கடவுளுக்கு கடிதம் எழுதுகிறவர்களுக்கு உதவிகள் செய்தும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்த்துள்ளார்.

சமுத்திரக்கனியின் போலீஸ் குழுவில் வரும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியில் தாராளம். சண்டைக் காட்சிகளில் வில்லன்களை எகிறி அடித்து ஆக்ஷனில் ஆச்சரியப்படுத்துகிறார்.

வீச்சருவா வீரப்பனாக வரும் பருத்திவீரன் சரவணன் குரூர வில்லத்தனம் காட்டுகிறார். ஒவ்வொருவராக தலையை வெட்டி சாய்ப்பது பதற வைக்கிறது. சரவணன் அடியாளாக வரும் செல்வகுமார் தோற்றத்திலும், வில்லத்தனத்திலும் பயமுறுத்துகிறார்.

சமுத்திரக்கனி மகளாக வரும் டயானா ஸ்ரீ குறை சொல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார். இமான் அண்ணாச்சியை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். யுவன் சண்டை காட்சிகளில் வேகம்.

சில இடங்களில் லாஜிக் தவறுகள் இருந்தாலும் அதையும் மீறி போலீஸ், வில்லன் மோதல் கதையை அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்தி விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு பலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com