உருச்சிதை: சினிமா விமர்சனம்

உருச்சிதை: சினிமா விமர்சனம்
Published on

அப்பா அம்மா, இரண்டு தங்கைகளுடன் வசிக்கும் கிராமத்து இளைஞன் கார்த்திகேயனுக்கு விளையாட்டு துறையில் சாதிக்க ஆசை. ஆனால் விபத்தில் தாய் தந்தை இறந்து போக குடும்ப பொறுப்பை ஏற்கிறார். நகரத்துக்கு சென்று கட்டிட வேலை செய்கிறார். அங்கு மேலாளராக வேலை செய்யும் சுகுணாவை விரும்புகிறார்.

இதை அறியும் தங்கைகள் அண்ணனுக்கு மணமுடித்து வைப்பதற்காக சுகுணாவிடம் சம்பந்தம் பேச செல்கிறார்கள். ஆனால் அவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. தங்கைகளை கார்த்திகேயன் தேடிச்செல்கிறார். அப்போது வாழ்க்கையை புரட்டி போடும் அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்து அவர் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறார். அதில் இருந்து கார்த்திகேயன் மீண்டாரா? என்பது மீதி கதை...

மாற்றுத்திறனாளியாக, வரும் நாயகன் கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து இயல்பாக நடித்து இருக்கிறார். தங்கைகளின் மீது காட்டும் பாசத்தில் இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டானா? என்று ஏங்க வைக்கிறார்.

கதாநாயகி சுகுணா பக்கத்து வீட்டு பெண் போல கதையோடு தன்னை இணைத்துக் கொண்டு இயல்பான நடிப்பை வழங்கி இருக்கிறார். தங்கைகளாக வரும் இருவருமே பாசத்தை கொட்டி நடித்துள்ளனர். நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன் இருவரும் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மேஸ்திரி, கொத்தனார், தந்தையின் நண்பர், கட்டுமான முதலாளி, தண்டல்காரன் என கதையை நகர்த்தும் முக்கிய பாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்துள்ளனர்.

ஜெ.ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். மகிபாலன் கேமரா கதைக்கு தேவையான அளவு உழைத்து உள்ளது.

திரைக்கதையை இன்னும் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.

எளிய மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குனர் எம்.சி.வி.தேவராஜ். ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதையை போகப்போக விறுவிறுப்பாக கொடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com