அக்னி சிறகுகள்

அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்க, நவீன் டைரக்டு செய்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
அக்னி சிறகுகள்
Published on

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம், அக்னி சிறகுகள்

கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம் இது என்ற பெருமையை பெறுகிறது. கொல்கத்தாவில் தொடங்கி, கஜகஸ்தான் வரை படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்.

இதுபற்றி டைரக்டர் நவீன் கூறியதாவது:-

அக்னி சிறகுகள் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவின் நெரிசல் மிகுந்த வீதிகளில் நிறைவு செய்த பிறகு, இப்போது ரஷ்யாவில் உள்ள கஜகஸ்தானில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பையும் வெற்றிகரமாக முடித்து இருக்கிறோம். அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷராஹாசன் ஆகிய மூன்று பேர் தொடர்பான பெரும்பகுதி காட்சிகளை, பூலோக சொர்க்கம் என்று சொல்லும் வகையில் அழகிய நகரமான கஜகஸ்தானில் உள்ள அல்மதி நகரத்தில் படமாக்கி இருக்கிறோம்.

அல்மதி நகரின் அழகை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். இயற்கை எழிலும் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்த அல்மதி நகரில் படப்பிடிப்பு நடத்தியதை பரவசம் தந்த ஒரு புனிதமான அனுபவம் என்றே கூற வேண்டும். பனி போர்த்திய மலைகள், தங்கமாக மின்னும் பாலைவன மணல், கண்களுக்கு விருந்தளிக்கும் செங்குத்தான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை பார்க்கும்போது, ஏதோ கனவுலகில் மிதப்பது போல் இருந்தது.

மெய்சிலிர்க்க வைக்கும் சில சண்டை காட்சிகளையும் இங்கே படமாக்கி இருக்கிறோம். ஆயுதங்கள் இல்லாமல் வெறும் கைகளால் போடும் மார்ஷல் ஆர்ட் சண்டை காட்சிகளும் படத்தில் இடம் பெறுகின்றன. ஆரம்பம் முதல் இறுதி வரை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் திகில் பாணி படமாக, அக்னி சிறகுகள் தயாராகி இருக்கிறது.

படத்தில் பிரகாஷ்ராஜ், ஷாலினி பாண்டே, சென்ராயன், ஜே.சதீஷ்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.சிவா தயாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com