சிறுமியின் 24 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு

மைனர் பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.
சிறுமியின் 24 வார கருவை கலைக்க ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
Published on

மும்பை, 

மைனர் பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

கருவை கலைக்க அனுமதி

மும்பை ஐகோர்ட்டு அவுரங்காபாத் கிளையில் 17 வயது மைனர் பெண்ணின் தாய் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் தனது மகளின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி கேட்டு இருந்தார். போக்சோ சட்டத்தின்படி மைனர் பெண், சிறுமி என்பதால் அவரது வயிற்றில் வளரும் கருவை கலைக்க அனுமதி தர வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவை கலைக்க கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பத்துடன் உறவு

மைனர் பெண்ணின் தாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரவீந்திர குகே, கோப்ரகடே தலைமையிலான அமர்வு முன் நடந்தது. விசாரணையின் போது, 17 வயது மைனர் பெண் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் வாலிபர் ஒருவருடன் உறவில் இருந்தது தெரியவந்தது. மைனர் பெண்ணின் விருப்பத்துடன் வாலிபர் அவருடன் பல முறை உடலுறவு வைத்து உள்ளார். இதனால் அவர் கடந்த பிப்ரவரி மாதம் கர்ப்பம் ஆகி உள்ளார். மைனர் பெண்ணே, மருத்துவ கருவியை வாங்கி வந்து அவரது கர்ப்பத்தை உறுதி செய்ததும் தெரியவந்தது.

அனுமதி மறுப்பு

இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், "விசாரணையில் மைனர் பெண் அப்பாவி இல்லை என்பது தெரிகிறது. அவருக்கு நடப்பதை புரிந்து கொள்ளும் பக்குவம் முழுமையாக இருக்கிறது. மைனர் பெண்ணுக்கு கருவை சுமக்க விரும்பமில்லை எனில் அவர் அதுபற்றி தெரிந்தவுடனே கருவை கலைக்க அனுமதி கோரி இருக்கலாம். எனவே அவர் வயிற்றில் வளரும் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும்" என கூறி மைனர் பெண்ணின் கருவை கலைக்க அனுமதிக்க மறுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com