சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை: மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்
Published on

மும்பை, 

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

இந்தநிலையில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரித்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மும்பையில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் மந்திரி வர்ஷா கெய்க்வாட், மும்பை தலைவர் பாய் ஜெக்தாப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசு அமலாகத்துறை போன்ற முகமைகளை தவறாக பயன்படுத்துவதாக கோஷம் எழுப்பினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களை கைது செய்தனர்.

ஜனநாயக படுகொலை

இதேபோல புனேயில் நடந்த போராட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி பிரித்விராஜ் சவான் உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் மந்திரி சாதேஜ் பாட்டீல் கூறுகையில், "அரசியலமைப்பு சாசனத்தை பின்பற்ற மாட்டோம் என பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. எதிர்கட்சிகளை அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். அதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த முறை அமலாக்கத்துறை ராகுல் காந்தியை குறிவைத்தது, திட்டமிட்டு இதுபோல செய்கிறார்கள். இது ஜனநாயக படுகொலை. காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறும்" என்றார்.

பயங்கரவாதத்தை உருவாக்கவும், எதிர்க்கட்சிகளின் குரலை நெரிக்கவும் அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது என பிரித்விராஜ் சவான் கூறினார்.

இதேபோல மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com