தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை

இன்று(செப்டம்பர் 15-ந் தேதி) தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவுநாள்.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை
Published on

புகழ்பெற்ற தமிழறிஞர் மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

தனித்தமிழ்

தமிழையும் சைவத்தையும் இரு கண்களாக கொண்ட மறைமலை அடிகள் தமிழர்கள் அனைவரும் கலப்படம் இன்றி தமிழ் பேசவும், எழுதவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் தனித்தமிழ் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கினார்,

தமிழர்களின் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்ற மறைமலைஅடிகள் நாகப்பட்டினம் காடம்பாடியில் 15-7-1876-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் சின்னம்மாள். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் வேதாச்சலம். தனித்தமிழில் ஆர்வம் கொண்ட அவர் வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார்.

அடிகளாரின் கல்வி நான்காம் வகுப்புடன் முடிவடைந்தது என்றாலும் தனது 21-ம் வயதுக்கு பிறகு பழந்தமிழ் நூல்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் .

மறைமலைஅடிகளுக்கு 17-வது வயதில் திருமணம் நடந்தது. மனைவி பெயர் சவுந்தரவல்லி. 1898 மார்ச் மாதத்தில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ் ஆசிரியராக அடிகளார் பதவி ஏற்றார். 13 ஆண்டுகள் அப்பணியில் இருந்தார் அவரிடம் மாணவர்களாக இருந்த ரசிகமணி டி.கே.சிதம்பரம் முதலியார், திருப்புகழ் மணி டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் பிற்காலத்தில் தமிழறிஞர்களாகவும் அரசியல் தலைவர்களாகவும் புகழ்பெற்று விளங்கினார்கள்.

அடிகளார் பல்லாவரத்தில் சொந்த அச்சகம் அமைத்தார். 1916-ல் தனி தமிழ் இயக்கம் கண்டார். இலக்கியம், சமயம், தத்துவம், வரலாறு, சமூக இயல் என்று பல்வேறு துறையில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அருட்பாமருட்பாபோர், பொருந்தும் உணவும் பொருந்தாத உணவும், மரணத்தின்பின் மனிதநிலை, முல்லைப்பாட்டு, ஆராய்ச்சி திருக்குறள் ஆராய்ச்சி, மாணிக்கவாசகர் வரலாறு காலமும் சிவ ஞானபோத ஆய்வு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

முல்லைப்பாட்டு

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழ் விளக்கவுரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலா என்னும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். தனித்தமிழ் இயக்கம் காரணமாக வழக்கில் இருந்த நமஸ்காரம், ஜலம், சந்தோஷம் போன்ற வடமொழிச் சொற்கள் முறையே வணக்கம், நீர் மகிழ்ச்சி என்றாயின.

சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். வள்ளலார் கொள்கைப்படி 1912-ல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் தொடங்கினார். தனி தமிழ் ஈடுபாட்டால் அதை பொதுநிலைக்கழகம் என பெயர் மாற்றினார்.

தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருந்தார் மறைமலை அடிகள். இந்தி பொது மொழியா? என புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அதை அவருடைய தாய் தடுத்தார். 'தமிழ் காக்க நாமல்லவா சிறை அனுப்ப வேண்டும்' என்று கூறி மகனை சிறைக்கு அனுப்பி வைத்தார்.

அடிகளாருக்கு சிந்தாமணி, நீலாம்பிகை, திரிபுரசுந்தரி என்று மூன்று மகள்கள். திருஞானசம்பந்தம், மாணிக்கவாசகம், திருநாவுக்கரசு சுந்தரமூர்த்தி என்று நான்கு மகன்கள். 27.8.1911-ல் துறவு மேற்கொண்ட அடிகளார் அது முதல் காவி உடைய அணியலானார். மறைமலை அடிகள் தமது ஆராய்ச்சிக்காக சேர்த்த நூல்களின் எண்ணிக்கை 4000 ஆகும். அவற்றை பல பகுதிகளில் பிரித்து தமது நூலகத்தில் அழகுற அடுக்கி வைத்திருந்தார். 1950 செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தமிழ் மொழிக்கு தன்னிகரில்லா தொண்டாற்றிய மறைமலை அடிகள் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார்.

நூல்நிலையம்

தமது நூல்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மறைமலை அடிகள் நூல் நிலையம் என்ற பெயரில் செயல்பட வேண்டும் என்று உயில் எழுதினார்.

மறைமலை அடிகளும், காசு பிள்ளையும், என் வலக்கையும், இடக்கையும் போன்றவர்கள் என்று பெரியார் புகழாரம் சூட்டினார். 'அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்' என்று திரு.விக பெருமையுடன் கூறினார். மறைமலை அடிகள் நினைவை போற்றும் விதமாக சென்னையில் உள்ள ஒரு பாலத்துக்கு மறைமலை அடிகள் பாலம் என பெயரிடப்பட்டது. சென்னை புறநகர்பகுதிக்கு மறைமலைநகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com