விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா? - மத்திய அரசு சொல்வதென்ன..?

நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில் புதிய வரி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடியில் இருந்து உறிஞ்சப்படும் மொத்த தண்ணீரில் 23,913 கோடி கன மீட்டர் தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இது மொத்த நிலத்தடி தண்ணீர் பயன்பாட்டு அளவில் 83 சதவீதமாக இருக்கிறது.

இந்நிலையில், நிலத்தடி நீர் வீணாக்கப்படுவதைத் தவிர்க்க, விவசாய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்படி தண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதை தடுக்கும் வகையில், மாநில அரசுகளுடன் இணைந்து புதிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிஐபி (PIB), விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீருக்கு வரி விதிக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம். நீர் மேலாண்மை மாநில அரசின் கீழ்தான் வரும் என்பதால் கட்டணம் வசூல் என்பது அவர்களது முடிவு. நீர் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கத்திலேயே நீர் மேலாண்மை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com