மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் இன்று பதவியேற்பு!

10 மாநிலங்களைச் சேர்ந்த இந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் பதவியேற்றனர்.
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உட்பட 27 பேர் இன்று பதவியேற்பு!
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினர்களில் 27 பேர், இன்று அரசியலமைப்பு சாசனப்படி முறையாகப் பதவியேற்றனர்.

அவர்கள் அனைவரும் மாநிலங்களவை அவைத் தலைவர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முரளீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

மாநிலங்களவை எம்.பி.யாக இன்று பதவியேற்ற 27 பேரில் 18 பேர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள்.

10 மாநிலங்களைச் சேர்ந்த இந்த 27 உறுப்பினர்கள் வெவ்வேறு மொழிகளில் இந்தி (12 உறுப்பினர்கள்), ஆங்கிலம் (4), சமஸ்கிருதம், கன்னடம், மராத்தி மற்றும் ஒரியாவில் தலா இருவர் மற்றும் பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா ஒருவர் பதவியேற்றனர்.

இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட உறுப்பினர்களில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் அடங்குவர். கோயல் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், சீதாராமன் கர்நாடகாவில் இருந்தும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், விவேக் கே தன்கா, முகுல் வாஸ்னிக் ஆகியோரும் பதவியேற்றனர். அதிமுகவை சேர்ந்த ஆர்.தர்மர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மொத்தம் 57 உறுப்பினர்களில் 14 பேர் மீண்டும் இரண்டாவது முறையாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இன்று பதவியேற்காத எஞ்சிய எம்.பி.க்கள், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் பதவியேற்க வாய்ப்புள்ளது.

மாநிலங்களவையில் உள்ள 72 உறுப்பினர்கள் ஜூலை மாதத்திற்குள் ஓய்வு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com