

புதுடெல்லி,
சீனாவில் உருவான கொடூர கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் உயிரைக் காவு வாங்கி உள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து தனது கோர முகத்தைக் காட்டி வரும் கொரோனா வைரஸ் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு பரவி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1463 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,815 ஆக உயர்ந்துள்ளது. 9272 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும், 1190 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 353 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.