

நாடாளுமன்றத்தில் பிரதமர்
நாடாளுமன்றத்துக்கு முதலில் வந்த பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்த தசாப்தத்தின் முதல் அமர்வு தொடங்குகிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு இந்த 10 ஆண்டுகள் மிக முக்கியமானவை. நமது விடுதலைப்போராட்ட வீரர்கள் கண்ட கனவுகள் நிறைவேறுவதற்கான பொன்னான தருணம் வந்திருக்கிறது என பெருமிதத்துடன் கூறினார்.
இது, ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்தார். அவரை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா ஆகியோர் வரவேற்று அழைத்து வந்தனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தின்போது நடத்தப்படுகிற நாடாளுமன்றத்தின் இந்த கூட்டு கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இது புத்தாண்டின் தொடக்கம். இது புதிய தசாப்தம் (10 ஆண்டு தொடக்கம்) ஆகும். இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டில் நுழைகிறோம்.
இந்தியர்களின் ஒற்றுமையும், அர்ப்பணிப்பும் பல துன்பங்களை, நாடு கடந்து வர உதவியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, வெள்ளம், பல மாநிலங்களில் நிலநடுக்கங்கள் அல்லது பெரிய புயல்கள், வெட்டுக்கிளிகள் தாக்குதல், பறவைக்காய்ச்சல் என நாடு பல நெருக்கடிகளை எதிர்கொண்டது.
சுய சார்பு
சமீப காலத்தில் எல்லையில் முன்எப்போதும் இல்லாத வகையில் பதற்றம் அதிகரித்தது. நாடு ஒன்றாக நின்று, பல முனைகளில் நெருக்கடிகளை எதிர்த்து போராடியது. ஒவ்வொரு சவாலையும் முறியடித்தது. இந்த கால கட்டத்தில் நம் நாட்டு மக்களின் ஈடு இணையற்ற தைரியம், சகிப்புத்தன்மை, ஒழுக்கம் மற்றும் சேவை உணர்வை நாம் அனைவரும் பார்த்தோம்.
ஆத்மநிர்பார் பாரத் அபியான் என்னும் சுய சார்பு இந்தியாவின் உற்பத்திக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதோடு, நாட்டின் தன்னம்பிக்கையையும் உயர்த்துவதை நோக்கமாக கொண்டதாகும்.
தடுப்பூசிக்கு பாராட்டுகள்
இந்த கொரோனா காலத்தில் இந்தியா தனது அறிவியல் திறன்கள், தொழில்நுட்ப- நிபுணத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் வலிமையை காட்டி உள்ளது. 2,200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கூடங்கள், குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வென்டிலேட்டர்கள், பி.பி.இ என்னும் சுய பாதுகாப்பு கருவிகள், சோதனைக் கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நிறைவேற்றுவது மிகவும் பெருமிதம் அளிப்பதாகும். இந்த திட்டத்தின் கீழான 2 தடுப்பூசிகளும் உள்நாட்டில் தயாரிக்கப்படுபவை ஆகும். பல நாடுகளுக்கு லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கச்செய்வதின் மூலம் இந்த கடினமான காலங்களில் மனித குலத்துக்கான தனது கடமையை இந்தியா நிறைவேற்றி உள்ளது. இதற்காக உலகளவில் இந்தியாவுக்கு பாராட்டுகள் வந்துள்ளன.
3 வேளாண் சீர்திருத்த மசோதாக்கள்
கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் விவசாயத்தை நவீனமயமாக்கும் வகையில், விதைக்கு சந்தை அமைப்பில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர அரசு முயற்சித்தது. இந்த முயற்சிகளை தொடர்ந்து, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த அரசு முடிவு செய்தது. உற்பத்தி செலவில் இருந்து ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டது.
விரிவான விவாதத்துக்கு பின்னர் நாடாளுமன்றம் 3 முக்கியமான வேளாண் சீர்திருத்த மசோதாக்களுக்கு 7 மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது.
இந்த 3 முக்கியமான விவசாய சீர்திருத்தங்களின் நன்மைகள், 10 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளை உடனடியாக சென்று அடையத்தொடங்கி உள்ளன. இந்த சீர்திருத்தங்கள் சிறுவிவசாயிகளுக்கு கொண்டு வரும் நன்மைகளை பாராட்டி, பல அரசியல் கட்சிகளும் அவ்வப்போது தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இந்த விவசாய சீர்திருத்தங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் மற்றும் வெவ்வேறு தளங்களில் எழுந்த இந்த சீர்திருத்தங்களுக்கான கோரிக்கை, நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு கட்டுப்படுவோம்
தற்போது இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அரசு மதிக்கிறது. அதற்கு கட்டுப்படும்.
அரசியலமைப்பின் ஜனநாயகம் மற்றும் புனிதத்தன்மை ஆகியவற்றின் மதிப்புகளை அரசு மிகவும் மதிக்கிறது. இந்த சட்டங்களின் சூழலில் உருவாக்கப்பட்ட தவறான புரிதலை களைவதற்கு தொடர்ந்து முயற்சி எடுக்கப்படுகிறது.
அரசு எப்போதுமே கருத்து சுதந்திரத்தை மதிக்கிறது. ஜனநாயக அமைப்பில் அமைதியான போராட்டங்கள் நடத்துவதை மதிக்கிறது.
இந்த நிலையில் தேசியக்கொடியை அவமதித்ததும், குடியரசு தினத்தன்று அவமரியாதை செய்ததும் துரதிர்ஷ்டவசமானது. அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்துக்கான உரிமையை நமக்கு வழங்கும்போது, சட்டங்களையும், விதிகளையும்சம நேர்மையுடன் நாம் கடைப்பிடிப்போம் என்று எதிர்பார்க்கிறது.
3 புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்னர், விவசாயிகளுக்கு கிடைத்து வந்த உரிமைகள், வசதிகள் எந்த வகையிலும் பாதிக்காது என்பதை அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. மாறாக இந்த விவசாய சீர்திருத்தங்கள் மூலம் அரசு விவசாயிகளுக்கு புதிய வசதிகளை வழங்கி இருப்பதுடன், அவர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.
உறுதியான நடவடிக்கை
ஒவ்வொரு மட்டத்திலும் நாட்டின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சவால் விடும் சக்திகளை எதிர்கொள்வதில் அரசு உறுதி கொண்டுள்ளது.
ஒருபக்கம் வன்முறை பாதித்த பகுதிகளில், வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் வன்முறையைத் தூண்டும் சக்திகளுக்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக நக்சலைட்டுக்கள் வன்முறைகள் குறைந்து, அவர்களால் பாதிக்கப்பட்ட பகுதி குறைந்து வருகிறது.
எல்லையில் சவால்கள்
நாடு கொரோனா வைரஸ் பெருந்தொற்று நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருந்தபோது, எல்லையில் நாட்டின் திறனுக்கு சவால்கள் வந்தன. இரு தரப்பு உறவுகள், ஒப்பந்தங்களை முற்றிலும் புறக்கணித்து அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதியை சீர்குலைக்க (சீன படையினரால்) முயற்சிகள் நடந்தன. ஆனாலும், நமது பாதுகாப்பு படைகள் இந்த சூழ்ச்சிகளுக்கு சரியான பதிலடி கொடுத்ததுடன் மட்டுமல்லாமல், எல்லையில் நிலையை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முறியடித்தன.
நமது வீரர்கள் காட்டும் கட்டுப்பாடு, வீரம், தைரியம் மிகுந்த பாராட்டுக்குரியவை ஆகும். கல்வான் வேலி பகுதியில் நாட்டை காப்பதற்காக நமது 20 வீரர்கள் கடந்த ஜூன் மாதம் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தனர். அவர்களுக்கு நமது குடிமக்கள் அனைவரும் கடன்பட்டிருக்கிறார்கள்.
ராணுவ தளவாட துறையில் சுயசார்பு
அரசு விழிப்புடன், நாட்டின் நலன்களை பாதுகாக்க முழு உறுதியுடன் உள்ளது. நாட்டின் இறையாண்மையை காக்க அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் இந்தியா வகிக்க உள்ள பெரிய பங்கை மனதில் கொண்டு, ராணுவத்தின் தயார் நிலையை வலுப்படுத்தும் நோக்கத்தை அரசு கொண்டுள்ளது. இந்தியாவின் ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக பல நவீன ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன. ராணுவ தளவாட துறையில் சுய சார்பு அடைவதற்கான உந்துதல் உளளது.
சில நாட்களுக்கு முன்னர்தான் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற 83 தேஜாஸ் போர் விமானங்களை ரூ.48 ஆயிரம் கோடியில் வாங்குவதற்கு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தியாவில் தயாரிப்போம்...
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ் தயாரிப்பதற்காக, பாதுகாப்புடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. இதே போன்று அதிரடி எதிர்வினை ஏவுகணைகள், டாங்கிகள், உள்நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட பல மேம்பட்ட ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா தனது பங்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான்-3, ககன்யன் மற்றும் சிறிய ரக செயற்கைக்கோள் ஏவுவாகனம் உருவாக்குதல் போன்ற திட்டங்களில் ஈடுபட்டு வருவதில் பெருமிதம் கொள்கிறோம். அணுசக்தி துறையிலும் நாடு சுயசார்பு அடைவதை நோக்கி வேகமாக நகர்கிறது.
நிறைவேற்றிய பணிகள்
கடந்த ஆண்டு நாம் காட்டிய கூட்டு ஒற்றுமையின் அதே பலத்துடன் புதிய இலக்குகளை அடைய வேண்டும். ஒரு காலத்தில் நாம் அடைய மிகவும் கடினமாக கருதப்பட்ட பல பணிகளை கடந்த சில ஆண்டுகளில் இந்தியா நிறைவேற்றி உள்ளது. அவை வருமாறு:-
* அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்த பின்னர், காஷ்மீர் மக்களுக்கு புதிய உரிமைகளுடன் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* குடியுரிமை சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* முப்படைகளின் தலைமை தளபதி பதவியை உருவாக்கி, நாடு பயன் அடையத் தொடங்கி இருக்கிறது.
* பாதுகாப்பு படைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
* சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் தொடங்கி உள்ளன.
* இந்தியா தொழில் தொடங்குவதற்கு இணக்கமான நாடு என்ற வகையில் சாதனை முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
* கடந்த 6 ஆண்டுகளில் பயனாளிகளுக்கு சுமார் ரூ.13 லட்சம் கோடி, அவர்களது வங்கி கணக்குகளில் நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* நாட்டில் ஒவ்வொரு ஏழையின் வீடும் மின்வசதி பெறுவதற்காக 2.5 கோடிக்கும் அதிகமான இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் இலவசமாக 8 கோடிக்கும் அதிகமான சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
* 41 கோடிக்கும் அதிகமான ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏழைகள் வங்கி முறையின் பயனை பெறுகின்றனர்.
நமது கடமையை நிறைவேற்றி தேசத்ததை கட்டியெழுப்புவோம். நாட்டை சுய சார்பு நாடாக மாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வருகிற போராட்டத்துக்கு தங்களது ஒருமித்த ஆதரவை தெரிவிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி உரையை புறக்கணித்தன.
காங்கிரஸ் எம்.பி. ரன்வீத் சிங் பிட்டு, சபையில் ஜெய் ஜவான் ஜெய் கிசான் என கோஷம் எழுப்பினார். மைய அரங்கின் பார்வையாளர் மாடத்தில் சில எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷங்களை போட்டனர்.
ஜனாதிபதி தனது உரையின்போது, கொரோனாவின் சவாலான கால கட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்படுவதை சுட்டிக்காட்டி, எவ்வளவு பெரிய சவாலாக இருந்தாலும் இந்தியா நிறுத்தாது. இந்தியா ஒன்றுபட்டபோதெல்லாம், அது சாத்தியமற்ற இலக்குகளை அடைந்துள்ளது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.