பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை: குஜராத் கோர்ட்டு தீர்ப்பு

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து ராணுவ தகவல்களை பகிர்ந்த 3 இந்திய வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஆமதாபாத்,

குஜராத்தின் ஜமால்பூரில் வசித்த சிராஜுத்தின் அலி பாகிர் (வயது 24), முகம்மத் அயூப் (23) ஆகியோர் கடந்த 2012 அக்டோபரில் ஆமதாபாத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள், இந்தியாவில் இருந்தபடி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய ராணுவ தளங்கள் பற்றிய ரகசிய தகவல்களை பகிர்ந்து, உளவு கூறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல ஜோத்பூரில் வசித்த நவுசத் அலி அதே ஆண்டு நவம்பர் 2-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அங்குள்ள ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்ததாக கண்டறியப்பட்டது.

பாகிரின் வீட்டில் ஆமதாபாத்தில் உள்ள இந்திய ராணுவதளத்தின் வரைபடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இமெயில் மூலமாக ராணுவ தளங்கள் பற்றிய தகவல்களை சிலருக்கு அனுப்பியதாகவும், அதற்கு கைமாறாக அரபு நாடுகளின் வழியாக பணம் பெற்றதும் தெரியவந்தது.

அப்ரூவரான ஏஜெண்டு

இந்த வழக்கில், ஜம்நகரில் வசித்த ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பின் ஏஜெண்டு என்று கருதப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாமல் அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் பின்னாளில் அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்தார்.

பாகிர், அயூப், நவுசத் அலியின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கிடைத்த ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்கள் மூவரின் குற்றம் உறுதி செய்யப்பட்டது. குஜராத் செசன்ஸ் கோர்ட்டில் இதுகுறித்த வழக்கு நடந்து வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி அம்பாலால் படேல் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.

குறைவான தண்டனை கிடையாது

அவர்கள் இந்தியாவில் பணியாற்றினாலும், அவர்களின் நேசமும், தேசப்பற்றும் பாகிஸ்தானை பற்றியதாக இருந்தது தெளிவாகிறது. அதனால் உளவு கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று உள்ளது உறுதியாகிறது.

நாட்டில் தங்கியிருந்து தேச விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு குறைவான தண்டனை வழங்குவதும் தேச விரோத செயலாக கருதப்பட வேண்டும் என நான் நம்புகிறேன்.

இது அரிதினும் அரிதான வகையின் கீழ் வராது. எனவே அரசு தரப்பின் மரண தண்டனை முறையீட்டை ரத்து செய்கிறேன் என்று கூறிய நீதிபதி 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com