

புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு நியமித்த அமைதிக்குழு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதுதொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளது.
இதற்கிடையே டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந் தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதில் பலர் பலியாகி உள்ளனர். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர்.
ஐகோர்ட்டில் விசாரணை
கலவரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறையாளர்களை கைது செய்யவும் கோரி சமூக ஆர்வலர் ஹர்ஷ் மண்டேர் தரப்பில் கடந்த 25-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நிலைமையின் அவசரம் கருதி ஐகோர்ட்டு நீதிபதி சி.முரளிதர் வீட்டில் அன்று நள்ளிரவில் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.முரளிதர் அனுப் ஜே.பம்பானி ஆகியோர், கலவரத்தில் காயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாரதீய ஜனதா தலைவர்களான கபில் மிஸ்ரா, அனுராக் தாகுர், பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு டெல்லி போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
மத்திய அரசு வக்கீல் கோரிக்கை
இந்த சூழ்நிலையில், ஹர்ஷ் மண்டேர் மனு நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.என்.பட்டேல், சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்பட்டது.
விசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், தற்போது நடைபெற்று வரும் அனைத்து சம்பவங்கள் தொடர்பாக தகவல்களும் மத்திய அரசிடம் உள்ளன. இது தொடர்பான அனைத்து வீடியோக்களும் மத்திய அரசு அதிகாரிகளால் பார்க்கப்பட்டன. தற்போது வழக்குகள் பதிவு செய்வதற்கான சூழல்நிலை இல்லை. இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மேலும் சிறிது அவகாசம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
48 வழக்குகள் பதிவு
மேலும், டெல்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளதால், மத்திய அரசையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்றும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், டெல்லியில் இயல்புநிலை திரும்பும் வரை இந்த விவகாரத்தில் கோர்ட்டின் தலையீடு கூடாது என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து, மத்திய அரசை இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.