

புதுடெல்லி,
டெல்லியில் கடந்த வருடத்தில் நடந்த கொலை சம்பவங்கள் பற்றி டெல்லி போலீசார் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். இதில், தனிப்பட்ட பகையால் கடந்த வருடத்தில் 37.95 சதவீத கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று சாலையை கடக்கும்பொழுது தோள்பட்டையை இடித்து விட்டு சென்றது அல்லது தொட்டியில் குளிர்ந்த நீர் நிரப்பிடாத வேலையாள் போன்ற சிறிய விவகாரங்களுக்காக 20.96 சதவீதம் பேர் அடித்து கொல்லப்பட்டு உள்ளனர்.
ராணுவ உயரதிகாரி ஒருவரின் மனைவியை மற்றொரு உயரதிகாரி கொலை செய்தது போன்ற, கள்ளக்காதலுக்காக 10.90 சதவீத கொலை சம்பவங்கள் நடந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
இவற்றில் தனிப்பட்ட பகையில், சம்பளம் கொடுக்காத பெண் பேஷன் டிசைனர் மற்றும் அவரின் பெண் பணியாளர் ஆகியோரை தையல்காரர் தனது இரு கூட்டாளிகளுடன் சேர்ந்து வசந்த் கஞ்ச் பகுதியில் கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவங்களில் 43 சதவீத கொலைகள் கொடிய ஆயுதங்களால் நடத்தப்பட்டு உள்ளன. 19 சதவீதம் துப்பாக்கிகளாலும், 16 சதவீதம் கட்டை போன்ற பொருட்களாலும், 14 சதவீதம் அடித்து கொல்வதும், 5 சதவீதம் பிற ஆயுதங்களாலும், ஒரு சதவீதம் விஷம் அல்லது மதுபானம் பயன்படுத்தி கொலை செய்வதும் நடந்து உள்ளன.