

புதுடெல்லி,
ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கணக்கை நாள்தோறும் பெருக்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் வரை 223 பேர் இந்த கொடூர வைரசின் கரங்களில் சிக்கியிருந்தனர். இதில் டெல்லி, கர்நாடகம், பஞ்சாப், மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் இந்த தொற்று எண்ணிக்கை நேற்று மேலும் அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 60 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் 315 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் இத்தாலியை சேர்ந்த 17 பேர் உள்பட 39 பேர் வெளிநாட்டவர் ஆவர்.
மேலும் கொரோனாவுக்கு புதிதாக சிக்கிய இந்தியர்களில் 12 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் அவர். இவர்களையும் சேர்த்து அங்கு மொத்த தொற்று எண்ணிக்கை 49 ஆகிவிட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவை தவிர மராட்டியத்தில் மொத்தம் 63 பேர், டெல்லி 26 பேர், உத்தரபிரதேசத்தில் 24 பேர் என நாடு முழுவதும் பரவலாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 6 ஆனது.
ஸ்காட்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய மேற்கு வங்காள மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 2 பேரும் ஐரோப்பாவில் இருந்து திரும்பியவர்கள் ஆவர்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தாயகம் திரும்பிய மேற்கு வங்காளத்தவர்கள் கட்டாயமாக தங்கள் வீடுகளில் 2 வார காலம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது அதிகாரிகள் மூலம் அவர்கள் அரசின் கண்காணிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள சிவில் ஆஸ்பத்திரியின் 1,200 படுக்கை கொண்ட பிரிவை கொரோனா தடுப்பு பிரிவாக மாற்றுவதாக முதல்-மந்திரி விஜய் ரூபானி அறிவித்தார். மேலும் ராஜ்கோட், வதோதரா மற்றும் சூரத்திலும் கொரோனா சிறப்பு பிரிவு அமைக்கப்படும் என அவர் கூறினார்.