

கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 21-ந் தேதி 4 மாத பெண் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு கடுமையான காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு இருந்தது.
பின்னர், பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், நேற்று காலை 6 மணியளவில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் குழந்தை பலியானது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி தரப்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அந்த குழந்தை, மூச்சு பேச்சில்லாமல்தான் ஆஸ்பத்திரிக்கு வந்தது. குழந்தையை உயிர்ப்பிக்கும் சிகிச்சை செய்யப்பட்டது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
நிமோனியாவுக்கு ஆன்டிபயாடிக் தரப்பட்டது. இருந்தும், குழந்தை தொடர்ந்து நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே இருந்தது.
குழந்தையின் தொண்டை சளி மாதிரி எடுக்கப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து குழந்தையின் உயிர் பிரிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை மரணம் குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா கூறுகையில், குழந்தை உயிரை காப்பாற்ற டாக்டர்கள் அதிகபட்ச முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார். உரிய விதிமுறைகளுடன் குழந்தை இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
மலப்புரம் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் சகீனா கூறியதாவது:-
குழந்தைக்கு பிறப்பில் இருந்தே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருந்துள்ளது. அதனால், உடல்நல கோளாறுகளால் அவதிப்பட்டு வந்துள்ளது.
முதலில், மூச்சுத்திணறலுடன் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. உடல்நிலை மோசமடைந்ததால் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டது. பிறகு அங்கிருந்து கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குழந்தையின் மரணத்தை தொடர்ந்து, கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தில், கொரோனாவுக்கு குழந்தை பலியாவது இதுவே முதல்முறை ஆகும்.
குழந்தை மரணம் அடைந்ததால், குழந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் என்று கண்டறியும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.