

மும்பை,
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக, கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதனால், உள்நாட்டில் உள்ள கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் உத்வேகம் ஏற்படும் என்று மத்திய அரசு கூறி வந்தாலும், இந்த நடவடிக்கையால் பலன் கிடைக்கவில்லை, பாதிப்புகள்தான் அதிகம் என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி 2016-17-க்கான ஆண்டறிக்கையை ஆகஸ்ட் இறுதியில் வெளியிட்டுள்ளது. அதில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன்னர் 632.6 கோடி, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில் 8.9 கோடி நோட்டுகள் திரும்ப வரவில்லை. இது 1.4 சதவீதமாகும். கடந்த ஆண்டு (2016) மார்ச் 31-ந் தேதி வரை நாடு முழுவதும் 1,570.7 கோடி, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்தன. ஆனால் இது இந்த ஆண்டு (2017) மார்ச் 31-ந் தேதியில் 588.2 கோடியாக குறைந்தது.
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவு தற்போது 2 மடங்காக அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.3,421 கோடியாக இருந்த இந்த தொகை, தற்போது ரூ.7,965 கோடியாக அதிகரித்து உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 7.62 லட்சம் எண்ணிக்கையில் கள்ளநோட்டுகள் சிக்கி உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 20.4 சதவீதம் அதிகமாகும் என கூறப்பட்டு இருந்தது. இதனையடுத்து மத்திய அரசின் மீதான விமர்சனம் அதிகரித்தது.
இப்போது மதிப்பிழப்பு செய்யப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை எண்ண உயர் தொழில்நுட்ப வசதி கொண்ட 66 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தாக்கல் செய்து இருந்த ஆர்டிஐ மனுவிற்கு பதிலளித்து உள்ள பாரத ரிசர்வ் வங்கி, இன்று வரை 59 சிவிபிஎஸ் எந்திரங்கள் நடைமுறையில் உள்ளது. இது தவிர கமர்ஷியல் வங்கிகளில் இருந்த 7 சிவிபிஎஸ் எந்திரங்களும் நோட்டுகளை எண்ண பயன்படுத்தப்பட்டன, என தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் பணத்தை எண்ண பயன்படுத்தப்பட்ட 59 சிவிபிஎஸ் எந்திரங்களில், ஒவ்வொரு எந்திரத்தையும் 5 நபர்கள் இயக்கினார்கள், நடவடிக்கையை ஒருங்கிணைக்க சூப்பர்வைசர் ஒருவரையும் நியமித்ததாக என ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவித்து உள்ளது.