

புதுச்சேரி,
கொரோனா தொற்று பரவலை தடுக்க புதுவையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படும் நிலையில், சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுவையிலும் நாளை முதல் இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்த பணியில் 1,000 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக 83 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 1 லட்சம் பேர் 15 வயது முதல் 18 வயதுக்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு 10 நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.