மனைவிக்கு சேலை பிடிக்காததால் ஜவுளி கடைக்காரரை தாக்கிய தொழிலாளி

எந்த சேலையும் மனைவிக்கு பிடிக்காததால் ஜவுளி கடைக்காரரை தொழிலாளி ஒருவர் தாக்கிய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கார்வார்,

பொதுவாக பெண்கள் ஜவுளிக்கடைக்கு சென்று சேலை எடுப்பதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும் என்று கூறுவார்கள். இதுதொடர்பாக பல நகைச்சுவைகளும் நாம் பார்த்திருக்கிறோம். திரைப்படங்களில் இந்த கருத்தை மையமாக வைத்து பல நகைச்சுவை காட்சிகள் வந்துள்ளன. அதுபோல் தனது மனைவிக்கு சேலை எடுக்க சென்றபோது அவருக்கு எந்த சேலையும் பிடிக்காததால் தொழிலாளி ஒருவர் ஜவுளிக்கடையின் உரிமையாளரை தாக்கிய சம்பவம் கர்நாடகத்தில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் சிர்சி பகுதியில் வசித்து வருபவர் முகமது(தொழிலாளி). இவர் நேற்று முன்தினம் சிர்சி சி.பி.பஜாரில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு தனது மனைவிக்கு ஒரு சேலை வாங்கினார்.

அதை வீட்டுக்கு கொண்டு சென்று மனைவியிடம் கொடுத்தார். ஆனால் அந்த சேலை, அவரது மனைவிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு அந்த ஜவுளிக்கடைக்கு வந்தார். பின்னர் சேலையை மாற்றித்தரும்படி கடை உரிமையாளரிடம் கேட்டார். அதற்கு கடை உரிமையாளரும் ஒப்புக் கொண்டார்.

பின்னர் முகமதுவின் மனைவி, கடையில் உள்ள சேலைகளை பார்த்தார். ஆனால் அவருக்கு எந்த சேலையும் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபமடைந்த முகமது, கடை ஊழியர்களிடம் தகராறு செய்தார். அப்போது கடையின் உரிமையாளர், முகமதுவிடம் 'நீங்கள் சேலை ஏதும் எடுக்க வேண்டாம், நீங்கள் வாங்கிய சேலைக்கான பணத்தை திருப்பி தந்து விடுகிறேன், திரும்பி சென்றுவிடுங்கள்' என்று கூறினார்.

அதற்கு முகமது, 'நான் நீங்கள் கூறும் விலையை கொடுத்துதான் துணி வாங்குகிறேன். அப்படியானால் நீங்கள் எனக்கு பிடித்த துணியைத்தான் கொடுத்தாக வேண்டும்' என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முகமது, தனது நண்பரை அங்கு வரவழைத்தார்.

பின்னர் இருவரும் சேர்ந்து கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். இதில் கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார். இதுபற்றி சிர்சி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com