

யவத்மல் (மராட்டியம்),
மராட்டிய மாநிலத்தின் யவத்மல் மாவட்டத்தில் உள்ள லோரா என்ற கிராமத்தில் உள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் அங்குள்ள ஒரு இளைஞர் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது, கிணற்றுக்குள் சில பைகள் கிடந்ததை கண்ட இளைஞர்கள், அதை வெளியே எடுத்து பிரித்துப் பார்த்தனர். அப்போது, ஏராளமான அசல் ஆதார் அட்டைகள் அவற்றுக்குள் இருந்தது தெரியவந்தது.
கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான ஆதார் கார்டுகள், லோரா கிராமத்தைச்சேர்ந்தவர்களுடையது ஆகும். கண்டெடுக்கப்பட்ட ஆதார்கார்டுகளில் பெரும்பாலானவை முழுவதும் சேதம் அடைந்திருந்தது. இதனால், அவற்றின் அடையாளங்கள் முழுமையாக தெரியவில்லை. ஆதார் கார்டுகள் அனைத்தும் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து, ஆதார்கார்டுகள் கிணற்றுக்குள் வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு வட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரையும் நாங்கள் தப்ப விடமாட்டோம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அஞ்சலக ஊழியர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து உள்ளூர் வாசியான ஷேஜால் என்பவர் கூறும் போது, நகராட்சி அலுவலகத்தில் ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், எனது ஆதார் கார்டு கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அஞ்சலக துறைக்கு அனுப்பப்பட்ட ஆதார் கார்டுகள் உள்ளிட்ட பிற முக்கிய ஆவணங்கள் வேறு ஏதேனும் கிணற்றில் வீசப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய கிராமங்களில் உள்ள கிணற்றை பார்க்க வேண்டும் என்றார்.