

மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பாராமதி பகுதி அருகே தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணித்த அவரது பாதுகாவலர்கள் 2 பேர் மற்றும் விமானிகள் 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவாருக்கு காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் மற்றும் அவரது சக பயணிகள் இன்று விமான விபத்தில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துயரமான தருணத்தில் மராட்டிய மக்களுடன் நான் நிற்கிறேன். இந்த துக்க நேரத்தில் பவாரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். .