

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். அப்போது, மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்து கொண்டார்.
அவருடைய உரையின் நகல்கள் மக்களவை உறுப்பினர்களுக்கு இன்று வழங்கப்பட்டன. இதன்பின்னர், மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார், வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மற்றும் சமீபத்தில் மறைந்த மக்களவையின் முன்னாள் உறுப்பினர்கள் ஷாலினி பாட்டீல், பானு பிரகாஷ் மிர்தா, சத்யேந்திர நாத் புரோமோ சவுத்ரி, சுரேஷ் கல்மாடி மற்றும் கபீந்திர புர்கயஸ்தா ஆகிய 5 பேருக்கும் அவையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
இதனை மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்து முடித்ததும் நாள் முழுமைக்கும் அவையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதேபோன்று, இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான உறவை வலுப்படுத்திய ஜியாவின் பங்கு எப்போதும் நினைவில் கொள்ளப்படும் என அவையில் பிர்லா குறிப்பிட்டார். விமான விபத்தில் இன்று உயிரிழந்த அஜித் பவார் மக்களவையின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.