அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்தால் சலசலப்பு

அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #YogiAdityanath
அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்தால் சலசலப்பு
Published on

லக்னோ,

அக்பர் மிகப்பெரிய பேரரசர் இல்லை எனவும், பேரரசர் என்ற பதத்துக்கு பொருத்தமானவர் மகாராணா பிரதாப்பே என்று உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் ஐ.எம்.ஆர்.டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- சுய மரியாதையில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத மகாராணா பிரதாப்பே மிகப்பெரிய பேரரசர் என்ற பட்டத்துக்கு பொருத்தமானவர். இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்சியாளராக பிரதாப் இருந்தார்.

அக்பரின் தூதுக்குழுவிடம், தான் ஒருநாளும் வெளிநாட்டவரையோ, இந்து அல்லாத ஒருவரையே பேரரசராக ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறும் துணிச்சல் மகாரணா பிரதாப்புக்கு மட்டுமே இருந்தது. வரலாறுகளை சிதைத்து தவறாக வழிகாட்டப்படும் சமூகத்தால், ஒரு போதும் வலுவான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்க முடியாது. மகராணா பிரதாப் வாழ்க்கை வராலாறு மற்றும் தீரம் ஆகியவற்றை மக்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் மேற்கண்ட கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உத்தர பிரதேச பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, மீரட் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான சன்கீத் சோம், முகலாய பேரரசர்கள் துரோகிகள் எனவும் அவர்களின் பெயர்களை வரலாறு பாடப்புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

அதேபோல், பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏவான சுரேந்திர சிங், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பெயரை, ராமர் மகால் என்றோ கிருஷண மகால் அல்லது ராஷ்ட்ர பகத் மகால் என்றோ மாற்ற வேண்டும் என கூறி சர்ச்சையில் சிக்கியது நினைவிருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com