7-ந் தேதி வழிபாட்டு தலங்கள் திறப்பு: உத்தவ் தாக்கரே

மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
7-ந் தேதி வழிபாட்டு தலங்கள் திறப்பு: உத்தவ் தாக்கரே
Published on

வழிபாட்டு தலங்கள்

கொரோனா பரவலை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் மாநிலத்தில் 2-வது கொரோனா அலை ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலத்தில் வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டன. அதன்பிறகு தொற்று பாதிப்பு குறைந்த போது மாநில அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. ஆனால் பொது மக்கள் அதிகளவில் கூட வாய்ப்பு இருந்ததால், வழிப்பாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதிக்காமல் இருந்தது.இதற்கிடையே மாநிலத்தில் கோவில்களை திறக்க வேண்டும் பா.ஜனதா போராட்டம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதாவினர் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோவில்களை திறக்க வேண்டும் என கவர்னர் பகத்சிங்கோஷ்யாரி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து இந்த விவகாரத்தால் கவர்னர், முதல்-மந்திரி இடையே மோதல் ஏற்பட்டது.

அடுத்த மாதம் திறப்பு

தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தொற்று பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்தநிலையில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மாநிலத்தில் அடுத்த மாதம் 7-ந் தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட உள்ளது. மராட்டிய அரசு 3-வது அலைக்கு தயாராகி உள்ளது. ஆனாலும் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு அனுமதித்து வருகிறது. பாதிப்பு குறைந்து வருகிற போதும், மாநிலத்தில் தொற்று அபாயம் இன்னும் உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிற போதும், எல்லோரும் கவனமாக இருந்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழிபாட்டு தலங்கள் செல்லும் பொது மக்கள் முககவசம் அணிந்து, சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும். வழிபாட்டு தல நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com