5 ஸ்டார் ஓட்டல் உணவை பழங்குடி நபர் வீட்டில் வைத்து சாப்பிட்ட அமித்ஷா; மம்தா கடும் தாக்கு

5 ஸ்டார் ஓட்டல் உணவை பழங்குடி நபர் வீட்டில் வைத்து சாப்பிட்டு அமித்ஷா நாடகம் போடுகிறார் என மம்தா பானர்ஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
5 ஸ்டார் ஓட்டல் உணவை பழங்குடி நபர் வீட்டில் வைத்து சாப்பிட்ட அமித்ஷா; மம்தா கடும் தாக்கு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பங்குரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் கூடியிருந்த மக்கள் முன் பேசும்பொழுது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் இந்த பகுதிக்கு வந்தபொழுது, பழங்குடியின நபர் ஒருவரின் வீட்டில் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அவர் வருவதற்கு முன், வீட்டில் உள்ளவர்கள் காய்கறிகளை, கொத்தமல்லி இழைகளை நறுக்குவது போன்ற புகைப்படங்கள் வெளிவந்தன. அது வெறும் நாடகம் என மம்தா குற்றச்சாட்டாக தெரிவித்துள்ளார்.

அமித்ஷா சாப்பிட்ட உணவில் அந்த பொருட்கள் சேர்க்கப்படவேயில்லை. அவர் சாப்பிட்டது பாஸ்மதி அரிசி உணவு. அவை 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில் சமைத்து கொண்டு வரப்பட்டவை என கூறியுள்ளார்.

அமித்ஷா வருகைக்கு முன்னர் அந்த வீட்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

ஆனால், நான் முன்பே திட்டமிடாமல் இங்கு வந்துள்ளேன். ஒரு கட்டிலில் அமர்ந்து, உள்ளூர் மக்களை சந்தித்து பேசினேன். அவர்களின் தேவைகளை கேட்டறிந்தேன் என்று கூறினார். விடுதலை போராட்ட வீரர் பிர்சா முண்டா சிலை என்று நினைத்து ஒரு சிலைக்கு அமித்ஷா மாலை அணிவித்துள்ளார்.

ஆனால், அது ஒரு வேட்டைக்காரரின் சிலை என்று உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். இதுபோன்று அவமதிப்புகளை ஏற்க முடியாது. அடுத்த ஆண்டில் இருந்து பிர்சா முண்டா பிறந்த நாளுக்கு அரசு விடுமுறை விடப்படும் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

எனினும், பா.ஜ.க. அது முண்டாவின் சிலையே என்று தொடர்ந்து கூறி வருகிறது. தனது கூற்றை மம்தா நிரூபிக்கும் வகையில், பழங்குடியின தலைவரின் புகைப்படம் ஒன்றை வெளியிடும்படி அவரை பா.ஜ.க. கேட்டு கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com