

புதுடெல்லி,
2017-ம் ஆண்டு தொடங்கி 2019-ம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்களில் யெஸ் வங்கி ரூ.5 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்தது. இதனை திரும்பி கொடுக்க தவறியதால் இந்த முதலீடு வாராக் கடன்களாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுநிதியான ரூ.11 ஆயிரம் கோடி, யெஸ் வங்கி மூலமாக மீண்டும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
2010-2012 காலத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ரூ.40 ஆயிரம் கோடி கடனாக பெற்று மோசடி செய்தது. இதுதொடர்பான வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்குகள் மூலமாக அனில் அம்பானியின் ரூ.12 ஆயிரம் சொத்துகள் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன. தற்போது மேலும் புதிதாக ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான ரூ.1,885 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதாக தெரிவித்துள்ளது.