மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கைது

பண மோசடி வழக்கில் மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கைது
Published on

மும்பை,

மராட்டியத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசியவாத காங்கிரசை சேர்ந்த அனில் தேஷ்முக் அம்மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

மும்பை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இதில், அப்போதைய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் பார்கள், ஓட்டல்கள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் மாமூல் வசூலிக்குமாறு மும்பை போலீசாரை கட்டாயப்படுத்தியதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பதவியை ராஜினமா செய்த அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பணமோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி அனில் தேஷ்முக்குக்கு அமலாக்கத் துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

சம்மனை ரத்து செய்யக் கோரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை மும்பை ஐகோர்ட் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் தேஷ்முக் நேற்று காலை 11.40 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் நள்ளிரவு அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார். அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் இதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் முறையிட போவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com