

ஜம்மு,
காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டி அமைந்துள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய 3 மாவட்டங்களிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட எல்லை புற சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அதிகாலை தாக்குதல் நடத்தினர். சிறிய ரக பீரங்கிகள் மட்டும், தானியங்கி ஆயுதங்களை கொண்டு அவர்கள் தாக்கினர்.
அதனை தொடர்ந்து நமது எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் தங்களுடைய துப்பாக்கிகளை கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலில் சம்பா மாவட்டத்தின் சம்பா செக்டார் பகுதியில் அப்பாவி மக்கள் 2 பேர் பலியாகினர். அதே போல் ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா செக்டார் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேரும், கதுவாவின் போபியா பகுதியில் ஒருவரும் உயிர் இழந்தனர். மேலும் 3 மாவட்டங்களிலும் நடந்த தாக்குதல்களில் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் உள்பட 40 பேர் படுகாயம் அடைந்தனர். கடைசியாக கிடைத்த தகவலின் படி எல்லை பகுதியில் இருதரப்புக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருவதாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்திவரும் நிலையில் அர்னியா பகுதியில் இருந்து 100 எல்லையோர கிராம மக்கள் வெளியேறினார்கள்.