

கவுகாத்தி,
அசாம்-மிசோரம் எல்லை பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில், கடந்த மாதம் அங்கு மிகப்பெரும் மோதல் ஏற்பட்டது. இதில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அசாமை சேர்ந்த முகமது இனாமுல்ஹக் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார்.
இதை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் குறித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை செயலாளர் மற்றும் அசாம், மிசோரம் மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாக பரிசீலித்த நிலையில், சம்பவத்தின் பின்னணி மிகுந்த இடையூறை ஏற்படுத்துவதாக இருப்பதாக கூறியுள்ள ஆணையம், அரசு ஊழியர்களின் இறப்பு மற்றும் காயம் தொடர்பாக மனுவில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும் தீவிரமானவை எனவும் கவலை தெரிவித்து உள்ளது.