

பெங்களூரு,
பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா துக்கனட்டி கிராமத்தில் ஒரு தலித் சமுதாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிராமத்தில் வசிக்கும் மற்றொரு குடும்பத்தினரை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி கிராமத்தை சேர்ந்த ஒரு கும்பலுக்கு தெரியவந்தது.
அந்த கும்பலினர், கிராமத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார்கள். அப்போது அங்கு தலித் குடும்பத்தை சேர்ந்தவர்கள், அங்கு அமர்ந்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர். உடனே ஆத்திரமடைந்த கும்பல், மதமாற்றம் முயற்சி செய்வது குறித்து கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தலித் குடும்பத்தை சேர்ந்த ஆண்களை அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் அந்த வீட்டின் சமையல் அறையில் கொதித்து கொண்டு இருந்த சாம்பாரை எடுத்து, தலித் குடும்பத்தினர் மீது வீசி உள்ளனர். இதில், 3 பெண்கள் உள்பட 5 பேருக்கும் பலத்த தீக்காயம் அடைந்தார்கள். உடனே அந்த கும்பலை சேர்நதவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர். தீக்காயம் அடைந்த பெண்கள் உள்பட 5 பேரும் முதல்கி டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியது துக்கனட்டி கிராமத்தை சேர்ந்த சிவானந்த், ரமேஷ், பரசப்பா பாபு, பகீரப்பா, கிருஷ்ணா ஆகிய 5 பேர் தான் என்று தெரியவந்தது. அவர்கள் 5 பேர் மீதும் கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகி விட்ட 5 பேரையும் தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.