அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

அயோத்தி வழக்கில் சமரச குழு ஜூலை 31 ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்
Published on

புதுடெல்லி,

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழுவுக்கு தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, அயோத்தி விவகாரம் தொடர்பான மனுவை தொடுத்த நபரின் சட்டவாரிசான கோபால் சிங் விசாரத் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அயோத்தி விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும், மத்தியஸ்த நடவடிக்கையால் எந்த பயனுமில்லை என்பதால் அதை முடித்து கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீதிபதி கலிபுல்லா தலைமையிலான குழுவுக்கு, மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை ஜூலை 18-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்தது. இதையடுத்து, சமரச குழு ஜுலை 31 ஆம் தேதி வரை பேச்சுவார்த்தையை தொடரலாம். ஆகஸ்ட் 1 ஆம் தேதி மீண்டும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியதோடு வழக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com