சீக்கிய மத குரு கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி என்கவுண்ட்டரில் பலி

உத்தரகாண்டில் சீக்கிய மத குருவான பாபா தர்செம் சிங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தம் சிங் நகர் மாவட்டத்தில் சீக்கியர்களின் புனித தலமான குருத்வாரா உள்ளது. இதன் தலைவராக பாபா தர்செம் சிங் என்பவர் இருந்து வந்தார்.

கடந்த மாதம் 28-ந்தேதி பாபா தர்செம் சிங் குருத்வாராவுக்குள் அமர்ந்திருந்தபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் பாபா தர்செம் சிங் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனிடையே சீக்கிய மத குருவை சுட்டுக்கொலை செய்த 2 கொலையாளிகளின் உருவம் குருத்வாராவில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதில் கொலையாளிகள் இருவரும் உத்தம் சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்த பிட்டு என்கிற அமர்ஜித் சிங் மற்றும் சரப்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் இருவரது தலைக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்து போலீசார் வலை வீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டத்தில் பகவான்பூர் பகுதியில் சிறப்பு அதிரடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீக்கிய மத குரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அமர்ஜித் சிங் மற்றும் சரப்ஜித் சிங் மோட்டார் சைக்கிளில் வருவதை போலீசார் கண்டனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் நிற்காமல் சென்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது அவர்கள் தப்ப முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அமர்ஜித் சிங் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அதே சமயம் சரப்ஜித் சிங் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதையடுத்து, என்கவுண்ட்டரில் காயமடைந்த அமர்ஜித் சிங்கை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தப்பியோடிய சரப்ஜித் சிங்கை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com