சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் மோடி: பியர் கிரில்ஸ்

சுற்றுச்சூழல் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டவர் என்று பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் மோடி: பியர் கிரில்ஸ்
Published on

புதுடெல்லி,

டிஸ்கவரி ஆங்கில டி.வி. சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். காடு, மலை, பாலைவனம் போன்ற இடங்களில் பயணம் மேற்கொண்டு ஆபத்தான சூழ்நிலைகளில் பிரச்சினைகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி? என்பதை அடிப்படையாக கொண்டது இந்த நிகழ்ச்சி. சாகச பிரியரான பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நெருக்கடிகளை சமாளித்து உயிர் வாழ்வது எப்படி? என்பதை செய்து காட்டுவது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.

இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு இருப்பதோடு, பியர் கிரில்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

உலக அளவில் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் ஏற்கனவே வழங்கி இருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவுடன் இணைந்தும் பியர் கிரில்ஸ் இந்த நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் பியர் கிரில்சும், பிரதமர் மோடியும் பங்கு கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு சிறப்பு நிகழ்ச்சி படமாக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ஜிம் கோர்பட் தேசிய பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சி டிஸ்கவரி மற்றும் அதன் குழும சேனல்களில் வருகிற ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது. உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் வைல்ட் குறித்து பியர் கிரில்ஸ் மீண்டும் பேசியுள்ளார். இந்தியாவின் நீண்டகால ரசிகன் நான். சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தவே பிரதமர் மோடி, ஒபாமாவை சாகச பயணம் அழைத்துச் சென்றேன். சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் ஆழ்ந்த அக்கறை இருந்ததால் மோடி என்னுடன் சாகச பயணம் செய்தார் . ஒரு இளைஞரைப் போன்று காட்டில் மோடி நேரத்தை செலவிட்டது எனக்கு வியப்பாக இருந்தது. மழையில் நனைந்தபோதும், ஆற்றில் தார்ப்பாய் படகில் சென்றபோதும் புன்னகையுடன் இயல்பாக இருந்தார் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com