பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் : தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #BharatBandh
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் : தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை
Published on

ஓசூர்,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

த.வெள்ளையன் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை இந்த முழு அடைப்புக்கு ஆதரவை தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. தொ.மு.ச. பேரவை, சி.ஐ.டி.யு., எ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி. உள்பட 10 தொழிற்சங்கங்களும் முழு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறது.இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.

பாரத் பந்த் காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரு செல்லும் தமிழக பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் செல்லும் தமிழக பேருந்துகள் களியாக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரிய அளவு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. சில இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகாவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஒடிசாவில், காங்கிரஸ் கட்சியினர் சம்பல்பூர் ரயில் நிலையத்தில், ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிபிஐ(எம்) கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com