

பாட்னா
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்கேஷ் சரண் (30). சமஷ்டிபூரில் உள்ள இந்திய ரயில்வேக்கு சொந்தமான டீசல் லோகோ ரயில் பெட்டி தொழிற்சாலையில் என்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் துர்கேஷ் சரண் . ஓராண்டுக்கு முன்பு உறவினர் திருமணத்திற்கு சென்ற அவர் பிரியங்கா குமாரி (23) என்ற பெண்ணை தற்செயலாக சந்தித்துள்ளார். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
ஒராண்டாக இருவரும் காதலித்துள்ளனர். சமீபகாலமாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சரணை குறித்த பெண் வற்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் பிரியங்கா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என்ற விவரம் சரணுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பிரியங்காவை சந்திப்பதை இளைஞர் தவிர்த்து வந்துள்ளார்.
மேலும் சரணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகள் நடந்தன. இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தனது உறவினர்களிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர் பெண் வீட்டார் ஆலோசனை செய்து குறித்த இளைஞரை கடத்தி வந்து, தங்கள் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் சரண், பணி முடிந்து தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வேறு ஒரு வாகனத்தில் வந்த பிரியங்காவின் குடும்பத்தினர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டினர். பின்னர் வாகனத்தில் ஏற்றி அவரை கடத்திச் சென்று வீடு ஒன்றில் அடைத்து வைத்தனர்.
அதற்குள் நடந்த விவரம் சரணின் பெற்றோருக்கு தெரிய வரவே, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த இளைஞரை மீட்டனர். மேலும் புகாரின் பேரில் பிரியங்காவின் உறவினர்கள் 5 பேரை ஆள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் பீகாரில் ஆண்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம் செய்துவைப்பது அதிகரித்து வருகிறது. போலீஸ் அறிக்கைப்படி கடந்த ஆண்டு மாநிலத்தில் 3,400 க்கும் அதிகமானோர் கடத்திச் செல்லப்பட்டு கட்டாய திருமணம் செய்து வைக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் 3070 பேரும், 2015 ஆம் ஆண்டில் 3000 ஆண்களும், 2014 ஆம் ஆண்டில் 2526 ஆண்களும் கடத்தபட்டு கட்டாய திருமணம் செய்துவைக்கப்பட்டு உள்ளனர்.