தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு

ராமநகரில் தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த விவகாரத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

ராமநகர்:

தொழில்அதிபர் தற்கொலை

பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே அமலேபுராவை சேர்ந்தவர் பிரதீப் (வயது 47), தொழில் அதிபர். இவர், ராமநகர் மாவட்டத்தில் உள்ள ரெசார்ட்டுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார். ரெசார்ட்டில் தங்கி இருந்த பிரதீப் நேற்று முன்தினம் காலையில் திடீரென்று எஸ்.எச்.ஆர். லே-அவுட்டில் உள்ள தனது வீட்டுக்கு தனியாக காரில் வந்தார்.

பின்னர் சிறிது நேரம் இருந்துவிட்டு மீண்டும் அவர் ரெசார்ட்டுக்கு புறப்பட்டார். இந்த நிலையில், கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நெட்டகெரே பகுதியில் காரை நிறுத்திவிட்டு துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு பிரதீப் தற்கொலை செய்திருந்தார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான அரவிந்த் லிம்பாவளி உள்பட 6 பேரின் பெயரை எழுதி இருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

சமாதான பேச்சு

அதில், பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகேயே புதிதாக ரெஸ்டாரண்ட் திறக்க 5 பேர், என்னை சந்தித்து பேசி இருந்தனர். அவர்கள் புதிய ரெஸ்டாரண்டில் உங்களையும் ஒரு பங்குதாரராக சேர்ப்பதாகவும், இதற்காக ரூ.1 கோடி கொடுக்கும்படியும் கேட்டனர். எனது வீட்டை விற்றும், கடன் வாங்கியும் ரூ.1 கோடியை கொடுத்தேன். ஆனால் என்னை பங்குதாரராக சேர்க்கவில்லை. பணத்தையும் திருப்பி தர மறுத்து விட்டனர்.

அப்போது தான் அரவிந்த் லிம்பாவளியின் உதவி கேட்டேன். அந்த 5 பேரையும், என்னையும் அழைத்து சமாதானமாக பேசி, ரெஸ்டாரண்ட் வருமானத்தில் இருந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்கும்படி அரவிந்த் லிம்பாவளி கூறிஇருந்தார். அதன்படி, 9 மாதங்கள் தலா ரூ.1 லட்சம் கொடுத்தனர். அதன்பிறகு, பணம் கொடுக்கவில்லை. என்னை பங்குதாரராகவும் சேர்க்கவில்லை. அரவிந்த் லிம்பாவளியிடம் இருந்து சரியான பதில் வரவில்லை.

எம்.எல்.ஏ. மீது வழக்கு

ஒட்டு மொத்தமாக ரெஸ்டாரண்டில் பங்குதாரர் ஆக்குவதாக கூறி பணம் வாங்கியதில் ரூ.2.20 கோடியை இழந்திருந்தேன். எனது சாவுக்கு கோபி, ராகவாபட், சோமய்யா, ரமேஷ் ரெட்டி, ஜெகதீஸ் மற்றும் அரவிந்த் லிம்பாவளியே காரணம் என்று பிரதீப் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் தனக்கு வர வேண்டிய ரூ.2.20 கோடியை பெற்று தனது மனைவி மற்றும் மகளிடம் கொடுக்கும்படியும் கடிதத்தில் பிரதீப் தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, பிரதீப் தற்கொலை விவகாரத்தில் நேற்று கக்கலிபுரா போலீசார், கடிதத்தில் அவர் கூறியிருந்த 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது கோபி, ராகவாபட், சோமய்யா, ரமேஷ் ரெட்டி, ஜெகதீஸ், பா.ஜனதா

எம்.எல்.ஏ.வான அரவிந்த் லிம்பாவளி மீது வழக்குப்பதிவாகி இருக்கிறது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை கக்கலிபுரா போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

விசாரணை தீவிரம்

பிரதீப் கடைசியாக யாரிடம் எல்லாம் பேசி இருந்தார், அவருக்கு ஏதேனும் மிரட்டல்கள் எதுவும் வந்துள்ளதா? என்பதை அறிய, அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா?. யாரிடம் இருந்து துப்பாக்கியை வாங்கினார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரதீப் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து தவல்களை பெற்றுள்ளனர்.

மேலும் பிரதீப் தற்கொலைக்கு காரணமாவர்களை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர். தொழில்அதிபர் தற்கொலை வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com