பா.ஜனதா தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது, மத்திய அரசு

மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மாநில அரசிடம், மத்திய அரசு அறிக்கை கேட்டு உள்ளது.
பா.ஜனதா தொண்டர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: மேற்கு வங்காள அரசிடம் அறிக்கை கேட்கிறது, மத்திய அரசு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தேர்தல் முடிவுகள் வெளியானபின் இது மேலும் அதிகரித்தன. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே நடந்த இந்த மோதல் சம்பவங்களில் பலர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் இரு கட்சியினரிடையே நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட நஸட் பகுதியில் நேற்று முன்தினம் இந்த இரு கட்சியினரிடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் வெடிகுண்டுகள் மற்றும் கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போர்க்களமானது.

இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரங்களாக நீடித்த இந்த சண்டையில் பா.ஜனதா தொண்டர்களான தபன் மொண்டல், சுகந்தா மொண்டல், பிரதிப் மொண்டல் ஆகிய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால் அந்த கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது பா.ஜனதா தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சம்பவங்கள் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் எடுத்துக்கூறுவோம் என பா.ஜனதாவை சேர்ந்த முகுல் ராய் கூறினார்.

அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரும் இந்த மோதலில் உயிரிழந்ததாக மாநில மந்திரி ஜோதி பிரியோ மல்லிக் கூறியுள்ளார். உயிரிழந்தவரின் பெயர் காயும் மொல்லா என்றும், அவரை பா.ஜனதா தொண்டர்கள் அடித்துக்கொன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த மோதல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியிடம் புகார் அளிப்போம் என பா.ஜனதாவினர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்டம், ஒழுங்கு விவகாரம் மாநில அரசு சார்ந்தது என்றும், மத்திய அரசுக்கு அதில் தலையிட உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையே வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் நடந்த மோதல் மற்றும் கொலைகள் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டு உள்ளது. அங்கு நடைபெறும் தொடர் அரசியல் கொலைகள் தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சகம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரித்து அமைதியை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் மேற்கு வங்காளத்தில் நாளுக்கு நாள் அரசியல் கொலைகள் அதிகரித்து வருவது மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com