சூரிய கிரகணம் எதிரொலி: கர்நாடகத்தில் கோவில்களின் நடை அடைப்பு

சூரிய கிரகணம் எதிரொலியாக கர்நாடகத்தில் உள்ள கோவில்களின் நடை அடைக்கப்பட்டது.
சூரிய கிரகணம் எதிரொலி: கர்நாடகத்தில் கோவில்களின் நடை அடைப்பு
Published on

பெங்களூரு:

சூரிய கிரகணம்

வானில் தோன்றும் அரிய நிகழ்வான சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும் என்றும், மாலை 4.29 மணிக்கு தென்படும் சூரிய கிரகணம் 5.42 மணியளவில் மறைந்து விடும் என்று கூறப்பட்டு இருந்தது. கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூருவில் சூரிய கிரகணம் கண்ணுக்கு தெரியும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

சூரிய கிரகணகத்தை பார்க்க பெங்களூருவில் உள்ள நேரு கோளரங்கத்தில் பிரத்யேக தொலைநோக்கு கருவி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் மாலை 5.12 மணி முதல் 6 மணி வரை சூரிய கிரகணம் தென்பட்டது. இதுதவிர கொப்பல், உப்பள்ளி, சிக்பள்ளாப்பூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளிலும் சூரிய கிரகணம் தென்பட்டது. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

கோவில்களில் நடை அடைப்பு

சூரிய கிரகணத்தையொட்டி கர்நாடகத்தில் உள்ள அனைத்து கோவில்களின் நடைகளும் நேற்று மதியம் 1 மணி முதல் இரவு 6 மணி வரை சாத்தப்பட்டு இருந்தது. பெங்களூரு வயாலிகாவலில் உள்ள முருகன் கோவில், மல்லேசுவரத்தில் உள்ள காடு மல்லேசுவரா கோவில், பனசங்கரியில் உள்ள அம்மன் கோவில், ஆர்.ஆர்.நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவில், முருகன் கோவில் உள்பட பெங்களூருவில் உள்ள முக்கியமான கோவில்களின் நடைகள் சாத்தப்பட்டு இருந்தன.

இதுபோல மைசூருவில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் திறக்கப்படும் ஹாசனில் உள்ள ஹாசனாம்பா கோவில், மங்களூருவில் உள்ள கத்ரி மஞ்சுநாதா கோவில், முருடேஸ்வராவில் உள்ள சிவன் கோவில், கேலார் தங்கவயலில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோவில் உள்பட கர்நாடகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களின் நடையும் சாத்தப்பட்டு இருந்தது.

வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்

சூரிய கிரகணம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு பின்னர் கோவில்கள் நடைகள் திறக்கப்பட்டன. பின்னர் கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. இதன்பின்னர் கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதுபோல சூரிய கிரகணம் நிலவிய போது பெங்களூரு நகரில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

இதனால் சாலை வெறிச்சோடி கிடந்தது. பயணிகள் வராததால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின. ஓட்டல்களிலும் கூட்டம் இல்லை. சூரிய கிரகணம் முடிந்த பின்னர் மக்கள் வழக்கம்போல வெளியே வர தொடங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com