பட்ஜெட் 2023: வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது...!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் 2023: வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது...!
Published on

புதுடெல்லி

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2023 அன்று தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மோடி அரசு, வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிப்பதுடன், வருமான வரி அடுக்கிலும் மாற்றங்களை செய்யும் என சம்பள வர்க்கத்தினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அரசு இந்த முறை வருமான வரி விலக்கு வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக அரசு உயர்த்தக்கூடும் என ஐஏஎன்எஸ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் இதை செயல்படுத்தினால், சாமானியர்கள் கையில் தினசரி செலவுக்கு ரொக்கமாக அதிக பணம் கிடைக்கும். இது வரும் காலங்களில் வாங்கும் திறனை ஊக்குவிக்கும். இதன் காரணமாக பொருளாதார நிலை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை முதலீட்டையும் ஊக்குவிக்கும்.

தற்போது 2.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டினால் அரசு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 60 வயது முதல் 80 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு இந்த விலக்கு கிடைக்கும். 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் சீனியர் குடிமக்களுக்கான விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாகும்.

பட்ஜெட் 2023 -ல் வரி செலுத்துவோருக்கு பல வித நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வரி செலுத்துவோருக்கு ஆயுள் காப்பீட்டில் அளிக்கப்படும் விலக்கின் அளவு பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இலிருந்து காப்பீட்டுத் திட்டங்கள் விலக்கப்படலாம்.

வருமான வரி 80C இன் கீழ் கிடைக்கும் விலக்குகளிலிருந்து ஆயுள் காப்பீட்டை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அமைப்பில், அனைத்து சேமிப்பு விருப்பங்களும் பிரிவு 80C இல் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் வரம்பு ரூ.1.50 லட்சம் மட்டுமே. அத்தகைய சூழ்நிலையில், ஆயுள் காப்பீட்டின் பிரீமியத்தை 80C க்கு வெளியே எடுத்தால், அதன் வரம்பு மேலும் அதிகரிக்கும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 21ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தவிர, 80சி இன் கீழ் கிடைக்கும் முதலீட்டு வரம்பும் இந்த முறை அதிகரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com